Sunday, April 12, 2015

வைரல் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 1000 இரண்டாம் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  திரு. பிரசன்னா கொத்து  அவர்கள் 


வைரல்  

              
       வினோத தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய் எனக்கு வந்துவிடுமோ' என்று ஒருவர் பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத் தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து பலியானார்.

      அந்த வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானது     எல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். உடனே பரவிவிடும். இப்படி ஒன்று பரவுகிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்ததுமே ஒரு நிமிடத்தில் இறந்தார். ஒரு சிலர் செய்தி வாசிக்கும்போது யோசிப்பதில்லை என்பதால் அவர்கள் மட்டும் அப்போதைக்குத் தப்பி பிறகு பொறுமையாக இறந்தனர். செய்தி எழுதுபவர்களுக்கும் அதே தான் நடந்தது.

       இந்த நோய் ஏற்கனவே கூட ஒருமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது இது சிந்தனையினால் பரவும் என்று தெரியாததால் முதல் சில பேருடன் அமுங்கிவிட்டது. இந்த தடவை பேரழிவை ஏற்படுத்திவிட்டே மறையும் போல் தோன்றுகிறது. பேஸ்புக், ட்விட்டரிலும் அந்த நோயைப்பற்றி பகிர்ந்து பரப்பிக் கொத்துக் கொத்தாக இறந்தனர். பரப்பினால் பரவும் என்று தெரிந்தாலும் பரப்பினார்கள். இனி இந்த நோயைப்பற்றி யாரும் பேசக்கூடாது என அரசு தடை பிறப்பித்தது. ஆனால் தடையாணை வெளியிடுவதற்குள் அதிகாரிகள் அனைவரும் இறந்தனர். ஆனால் உப விளைவாக ஒரு நிமிட அன்பு எல்லா இடங்களிலும் ததும்பி ஓடியது. முந்தைய நிமிடம் வரை அடுத்தவரிடம் வெறுப்பை உமிழ்ந்தவர்கள் கூட பயந்ததும் கடைசி நிமிடத்தில் அனைவரிடமும் பரபரப்பான அன்போடு பழகினார்கள்.

       கடைசியாக எஞ்சியவர்கள் குழந்தைகள், சுயமாக யோசிக்க முடியாத மனநிலை சரியாக இருந்தவர்கள் (இறந்தவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று மாற்றி அழைக்கப்பட்டனர்), செய்தி பரவ முடியாத இடத்தில் இருந்த ஆதிவாசிகள் போன்றவர்கள்.
இவர்களுடன் அம்மாபாக்கம் ஏரியா பஞ்சாயத்து தலைவரும் பிழைத்தார். இப்படி ஒரு நோய் பரவுவதாகச் சொன்ன உதவியாளரிடம் அவர் கேட்டார், "இந்த பிரச்சினையில நமக்கு பணம் எதுவும் கிடைக்க வழியிருக்கா? எவ்வளவு தேறும்?உதவியாளர் பதிலேதும் சொல்வதற்குள் இறந்து விழுந்ததும் தலைவர் நோயைப்பற்றி அதற்குப் பிறகு சிந்திக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம். இக்கதையின் கடைசி வரியை எழுதி முடித்ததும் கதாசிரியர் ஒரு நிமிடத்தில் மாண்டார். உங்களுக்கு இன்னும் அறுபது நொடிகள்அவகாசம்.

                                      **********

7 comments:

  1. சுவராஸ்யமான கான்செப்ட் ..ஆனா கொடுக்கும் விதத்தை பொறுத்துதான் இருக்குது திறமை .எழுத்திலே அது தெரியல ...காணொளியா வருமா ?

    ReplyDelete
  2. Ithu short story endra vagaiyil ok. But Short film akka sariyaga varuma Mr.AAVEE? Is it a Short film or Documentary?

    ReplyDelete
  3. இதை சர்வசாதாரணமாக குறும்படமாக எடுக்க முடியாது...

    ReplyDelete
  4. சத்தியமா முடியலங்க.. இது குறும்படத்திற்கு லாயக்கா இல்லயா'ன்னு தெரியல.. (சுவாரஸ்யப்படுத்துற ட்ரீட்மென்ட்'க்கு நிறைய அனுபவம் வேணும்)

    ஆனா குறுங்கதையா சுத்தமா நல்லாயில்ல.. எழுபது எண்பதுகளில் எழுதப்பட்ட அறிவியல் மிகுபுனைவுகளைவிட ரொம்ப ரொம்ப சுமார்..

    னடுவர்களின் பார்வை என்ற ஒன்றை மதிக்கிறேன்.. ஆனா அதுக்காக இந்த கதைக்கு இரண்டாம் பரிசெல்லாம்.. சத்தியமா ஒத்துக்க முடியல..

    ReplyDelete
  5. ‘வைரல்’ திரு. பிரசன்னா கொத்து அவர்கள் எழுதிய சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துகள்.


    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. வைரல் மிகவும் வித்தியாசமான ஒரு ஃபிக்ஷன் கான்செப்ட். ஆனால் சொன்ன விதம் அதாவது கதையின் நடை சற்று சுவாரஸ்யமாக இருந்திருக்கலாமோ என்று எண்ண வைத்தது. குறும்படம்?! ஹாலிவுட்காரன் என்றால் காசத் தண்ணியா கொட்டி ஜாலம் - கிராஃபிக்ஸ் னு விளையாடுவான்.......ஆனால் அந்தக் கடைசி வரிகள் பக்கா இந்திய அதுவும் தமிழ்நாட்டு லோக்கல் என்றாகிவிட்டது....

    வாழ்த்துகள் பிரசன்னா... (இங்கிலிஷ் படம் நிறைய பார்ப்பீங்களோ....?!!!!)

    ReplyDelete