"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 500 மூன்றாம் பரிசு பெறும் சிறுகதை..!
படைப்பாக்கம் : அரசன் அவர்கள்
தேள்கொடுக்கு
வேப்பமரத்து நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு, கோவில் டப்பைக் கதவில் கட்டியிருந்த தபால் பெட்டியில், கொண்டு வந்திருந்த கடிதத்தை போட்டுவிட்டு கிளம்பினாள் சுமதி. வியர்வையில் நனைந்திருந்த அவளின் ஜாக்கெட்டை மேய்ந்தபிறகு தான் முகத்துக்கு தாவின கோவிலினுள்ளே ஊர்ஞாயம் பேசிக்கொண்டிருந்த கண்கள். முப்பது போல் தெரியாத உடல்வாகு, மெலிந்ததேகம், சற்று பருத்த மார்பு. சிரிக்கையில் மட்டும் அடிக்கடி கண் சிமிட்டும் அவளைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்துப் போகும்.
வலதுபுற தாழ்வாரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வாசலிலிருந்த மண்பானைத் தண்ணியை குடித்துவிட்டு உள்திண்ணையில் கிடந்த தளர்ந்து போன நார்க்கட்டிலில் தொப்பென விழுந்தாள். வெளியில் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்த கோழி பயந்து வேறுபக்கம் ஓடியது. "ம்ம்மா" வென வீறிட்டது பாலுக்கு ஏங்கிய இளங்கன்றோன்று!
"யோவ், ஐஸு நில்லுய்யா", என ஐஸ்காரனை நிற்க சொல்லிவிட்டு இடுப்பிலொன்றும், விரல் பிடித்தது ஒன்றுமாய் செல்லும் வசந்தியை எட்டி பார்த்ததும் சுமதிக்கு கண்ணில் நீர் கோர்த்துவிட்டது. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருந்தது சுமதிக்கு.யாருமற்ற அந்த வீட்டில் இவள் மட்டுமே இவளுக்கு ஆறுதல். மெல்ல கட்டிலிலிருந்து இறங்கி கூட்டாமல் கிடக்கும், வெறுந்தரையில் சுருண்டு படுத்தாள். வாசல் புழுதியை வாரி இறைத்து விட்டுப் போனது பெருங்காத்து ஒண்ணு.
இப்படித்தான் ஒருநாள் அவனும் வந்தான். மாவு அரைக்கப் போகையில், மெல்ல கையை சுரண்டியபடி மீசையை சொரிந்த சம்பத்திடம் செருப்பை காட்டி வந்தவ, இவனிடம் எப்படி விழுந்தான்னு இன்னும் ஆச்சர்யமா இருக்குது. வெடிச்ச வெள்ளரி மாதிரி அவன் சிரிச்ச சிரிப்புல சிக்குனவதான் இன்னும் தெளியல அந்த சீக்கு. எதையோ கேட்டு வந்தவனிடம் அவளையே கொடுக்குமளவிற்கு அடங்கிபோனாள். கொஞ்சநாள் ஆசையா பேசுனான், இவளுக்கும் அது பிடித்திருந்தது. எதிர்முனை பேச்சுக்கு எப்பவுமே மயக்கம் ஜாஸ்தி தானே! பேச்சு கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சலாய் மாறியது.
ஒருநாள் சுமதியோட ஆத்தாக்காரிசின்னு பக்கத்தூரு எழவுக்கு போயிருக்கும் நேரமா பார்த்து பின்வாசல் வழியாவந்து, இவளை நெருங்க, வாரியணைத்துக் கொண்டாள். ருசி கண்ட நாக்கு சும்மா இருக்குமா? முந்திரி, முட்டக்கருவதோப்பு இப்படின்னு அஞ்சாறு முறை தொடர்ந்தது. யாரும் வேண்டாம், அவன் மட்டும் போதுமென நினைக்குமளவிற்கு இழுத்துக் கொண்டு போனது அந்த கிறக்கம்! சூடுபட்ட பூனையாட்டம் அடுப்பங்கரையில படுத்துக் கெடந்தவள பார்த்துட்டு, "என்னடி இப்படி படுத்து கெடக்கேன்னு" சின்னு கேட்க, திக்கித் திணறி விசயத்தை சொன்னா சுமதி.
"என் குடும்பத்துல இப்படி கொண்டாந்து இடிய போட்டுட்டியேடி" ன்னு கெடந்து கதறி கதறி என்னனென்னமோ சொல்லி திட்டிபுட்டு, ஆளு யாருன்னு கேட்டுட்டு, கூட்டியாந்து நடுவூட்ல உக்கார வைச்சி அரவம் தெரியாம கேட்டா சின்னு. எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, இன்னும் ரெண்டு வருஷம் போவட்டும் அத்த, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், அண்ணனை வைச்சிகிட்டு தம்பி கல்யாணம் பண்ணுனா ஊரு ஒலகம் ஒரு மாதிரியா பேசாதா?ன்னான் மூணாவது தெரு பொம்மன் மகன் சங்கர்.
ஊரு, ஒலகம் ஒரு மாதிரி பேசறது இருக்கட்டும், மடிய நிரப்பி நிக்கும் எம் புள்ளைக்கு வழியென்ன? என்றாள் சற்று ஆங்காரத்துடன்.
"அத்த, ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டோம், நடந்தது நடந்து போச்சி, இப்ப தான் நெறைய வழியிருக்கே ஏதாவது ஒன்னை பண்ணிகலைங்க, ரெண்டு வருசத்துல சுமதி கழுத்துல தாலி கட்ட வேண்டியது எம் பொறுப்பு, மீறி வூட்டு பக்கம் வந்து சத்தம் போட்டு உங்க மானத்தை நீங்களே வாங்கிக்காதீங்கன்னு சொல்லிபுட்டு சுமதிய கூட ஏறெடுத்து பாக்காம விருட்டுன்னு கெளம்பினான் சங்கர்.
"கேட்டியாடி தேவிடியா, அவன் என்ன பேச்சு பேசிட்டு போறத, இவன நம்பி, உன்னையே கொடுத்துருக்க. உன்னை வாழ வைக்கிறவன் மாதிரி தெரியலைடி.வாழ வைக்கணும்ன்னு நெனைக்கிறவன் எதுக்குடி, வாய் கூசாமா கலைச்சிட்டுவான்னு சொல்ல போறான், ஆம்பளை இல்லாத வூடுங்கிற தைரியத்துல தான் நீயும் படிதாண்டி போன, அவனும் அப்படி பேசிட்டு போறான்." ஆங்காரத்தில் கொஞ்ச நேரம் கத்திபுட்டு ,ராவெல்லாம் சுமதிக்கு மட்டும் கேட்கும்படி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள் சின்னு.
அவன் போனதையும், முதன் முறையா ரெண்டு பேரும் கட்டி உருண்ட எடத்தையும் மாறிமாறி பார்த்துகொண்டே கசிந்தாள் சுமதி. பூனையொன்று சோற்றுப் பானையை உருட்டுவதைக் கூட கவனிக்காமல் மூலைக்கொரு ஆளாய் சுருண்டு கெடந்தனர். விடியுமுன்னே, சுமதியை எழுப்பிவிட்டு, கெளம்புடி திருவையாறு போவோம்ன்னு சொல்லி கெளப்புனா சின்னு. ரெண்டு நாள் ஹாஸ்பிட்டலில் தங்கும்படி ஆச்சி, மூணாம் நாள் பொழுதோட வூடு வந்து சேர்ந்தார்கள் தாயும், புள்ளையும்.
வதங்கிய கீரைக் கொடி போலிருந்தா சுமதி.
பத்து நாள் கழிச்சி ஒருநாள் வந்து வாசல்ல நின்னே பேசிட்டு போனான் சங்கர். தகவலறியத்தான் வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் சுமதி. தண்ணி புடிக்க அவன் வீட்டை கடக்கையில் முன்பெல்லாம் பட்டாம்பூச்சி கூட்டம் வட்டமடிக்கும், இப்போ கருவேல முள்ளாய் கிழித்துக் கொண்டிருக்கிறது அவன் நினைவு. மூணு மாசத்துக்கு அப்புறம் ஒரு ராத்திரியில், இளம் போதையில் வந்து கதவை தட்ட, சுமதி திறந்தாள். சங்கர் ஏதோ சொல்ல, இவள் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.
சுமதியை கன்னத்தில் வலுக்க அறைந்து உள்ள போடின்னு சொல்லிட்டு, "போடா, உன் அக்கா, தங்கச்சி அவளுக கூட படுத்து எழும்பு போ"வென கத்தினாள் சின்னு. எங்கேயிருந்து அந்த ஆவேசம் வந்தது என தெரியவில்லை சின்னுவுக்கு, சுமதி சற்று மிரண்டு தான் போனாள். அன்று போனவன் தான் அதன் பிறகு சுமதியை நாலைந்து முறை கோவிலில் பார்த்து விட்டு ஏளனமாய் கடந்து போனான். இவளும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. வலிகளை தாங்க பழகிக்கொண்டால், வலியின் சுவை சுகமாகத்தான் இருக்கும்போல.
ரெண்டு மாசம் படுக்கையில் கெடந்து , இவளை தனியா விட்டுட்டு ஒரு அமாவாசைக்கு முந்திய இரவில் போய் சேர்ந்தாள் சின்னு. ஒண்ணரை வருடத்திற்குள் வாழ்க்கையின் எல்லா கோரங்களையும் பார்த்து விட்டாள் சுமதி, உடலளவில் மட்டும் சோர்ந்து போயிருக்கிறாள் ஒழிய மனதளவில் தெம்பாகத்தான் இருக்கிறாள். பால் மாடொன்றை வைத்துக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கும் சுமதிக்கு, இறக்கி வைக்க முடியாத அளவிற்கு சோகம் இருந்தாலும், இயல்பாய் இருப்பவளை, மாசத்துக்கு ஒருமுறையேனும் சூறைக்காற்று போல வந்து சுழட்டியடித்துவிட்டு சென்று விடுறது அந்தக் கறுமை நினைவுகள். வேறு எவராக இருந்தாலும் இந்நேரம் தற்கொலை பண்ணிக்க கூடும், இவள் சற்று அழுத்தக்காரிதான்.
"நாப்பது பவுன் கேட்டு, தெக்க உஞ்சினில இருந்து கட்டி வந்த பொண்டாட்டிக்கு குழந்தை வரமே இருக்காதுன்னு டாக்டர் சொன்னதிலிருந்து இந்த சங்கர் பய பித்து புடிச்சவன் மாதிரி ஆயிட்டான்னு அவன் ஆத்தாக்காரியே சொல்றான்னு" பேசிக் கொண்டு போகும் ரெண்டு கெழவிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வாசலை பெருக்கிக் கொண்டிருந்தாள் சுமதி.
வெள்ளி சற்று பிரகாசமாக தெரிந்தது.
**********
அன்புள்ள அய்யா,
ReplyDeleteதேள்கொடுக்கு - சிறுகதை ... சுமதியின் அக்னி பிரவேசம் - வேறு எவராக இருந்தாலும் இந்நேரம் தற்கொலை பண்ணிக்க கூடும், இவள் சற்று அழுத்தக்காரிதான்.
வலிகளை தாங்க பழகிக்கொண்டால், வலியின் சுவை சுகமாகத்தான் இருக்கும்போல....அருமையான கதை! அழகிய நடை!
பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.
நன்றி.
வாழ்த்துகள் அரசன்
ReplyDeleteஅருமை...
ReplyDeleteஅரசன் என்பதை ஒவ்வொரு பத்தியும் சொல்கிறது... வாழ்த்துக்கள்...
அரசனின் நடை... ஐமீன் எழுத்து நடை அழகாக இருக்கிறது.
ReplyDeleteஉள்ளம் நிறைந்த நன்றிகள் ஜேம்ஸ் அய்யா ...
ReplyDeleteமிக்க நன்றிகள் முரளி சார்
ReplyDeleteமிக்க நன்றிகள் DD ஸார்
ReplyDeleteஅன்புக்கு என் வணக்கங்கள் வாத்தியாரே ...
ReplyDeleteதகவலே சொல்லலயே அண்ணாச்சி.. வாழ்த்துகள்...
ReplyDeleteகதைக்கு வருவோம். கண்மணி வாசிப்பு பாதிப்பு கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்கு போல.. நல்லாருக்கு.. :)
குறும்படத்திற்கு கொஞ்சம் சவாலான கதை.. நம்ம டைரக்டர் என்ன பன்றார்'னு பாப்போம்.. அப்றம் அந்த சங்கர் கதாப்பாத்திரத்தை நீங்களே பண்ணனும்'னு ரசிகர் விருப்பம். :)
அரசன் வாழ்த்துகள்! முதல்ல இந்தக் கதை யாருன்னு பார்க்கலை. வாசிக்க ஆரம்பித்து முதல் மூன்று வரிகள் படித்ததுமே, இது இது நம்ம அரசன் பாணி போல இருக்குதே என்று பார்த்தால் "அட அரசனேதான்"
ReplyDeleteஉங்க நடையே காமிச்சுருச்சுப்பா....
- கீதா
இது படமாக எடுக்கலாம்...திரைக்கதை நன்றாக அமைத்துவிட்டால்...ஆனால் கிளிஷே என்று குரல்கள் வரலாம்....
ReplyDeleteநன்று. ஆபாச போலீஸ் ஏதும் சொல்லலியா? 😊
ReplyDelete