Friday, April 3, 2015

நேயம் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 250 ஆறுதல் பரிசு பெறும் இரண்டாவது சிறுகதை..!


படைப்பாக்கம் :  மணவை திரு. ஜேம்ஸ் அவர்கள் 


நேயம் 

                விடியாத அந்த வைகறைப் பொழுதில் சூளியாபட்டிக்குள் பால்காரர் மணியை அடித்தபடி நுழைந்தார். பால்காரர் மணியடித்தாலே மணி நான்கு என்று அர்த்தம். வெயிலையும் பனியையும் வரவேற்கும் ஓலைக் குடிசையில் வசிக்கும் கதிரவனின் அப்பா, இராமசாமி அன்றாடங்காய்ச்சி. நீடித்துவந்த இருமலுக்கு கைவைத்தியமாய்ச் செய்த கஷாயங்கள் எடுபடாமல் போய் இறுதிச் சரணாகதியாய் அரசுமருத்துவமனைக்குச் சென்றபொழுதுதான் டி.பி. முற்றிவிட்டது தெரிந்தது.  இருமியபடியே தன் மகன் கதிரவனை எழுப்பினார், கதிரவன் எழுந்தான்.

          தன் தங்கை பிறந்த பொழுதே தாய் இறந்துவிட‘தாயை முழுங்கியவள் என்ற பெயருடனே தங்கை கயல்விழி இப்பொழுது பிளஸ்டூ படிக்கிறாள்.  குடும்பத்தையே இவன்தான் காப்பாற்றவேண்டிய நிலையில் இருந்தான். அரைமணி நேரத்திற்குள் பேண்ட் சட்டையை மாட்டிக் கொண்டு கதிரவன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மணப்பாறைக்குப் புறப்பட்டான்.  இரண்டு மைல்தூரத்தையும் கால்மணி நேரத்தில் கடந்து, வேகமாகப் பேருந்து நிலையத்திற்குள் அவன் நுழைவதற்கும் அந்தப்பேருந்து உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.


பேருந்துக்குள் இருந்த தினசரிப் பேப்பர் பார்சலை எடுத்துசைக்கிளுக்குப்பின் வைத்துக்கொண்டு புறப்பட்டான்.  நூறு வீட்டிற்குப் பேப்பர் போட்டாக வேண்டும். அவனின் முதலாளி ஒரு பேப்பருக்குக் கொடுக்கும் ஐம்பது பைசாவீதம் சராசரியாக ஐம்பது ரூபாய் கிடைக்கும்.  இதில் தினமும் பேப்பர் போடும் டாக்டர் வீட்டில் உள்ள ‘ரோஜர்நாய்க்கு ஒரு பிஸ்கட் போட அவன்என்றும் தவறியதே இல்லை. காரணம் நாய் குரைக்கக்கூடாது என்பதற்காகவா? கடித்துவிடக்கூடாது என்பதற்காகவா? அப்படி ஒன்றும் அந்த நாய் எந்த தொந்தரவும் செய்வதில்லை.  கதிரவன் சிறியவனாக இருந்தபொழுது ஒரு நாய் அவன் வீட்டில் இருந்ததுதான் காரணம்.இந்த ‘ரோஜர்இவனைப் பார்த்தால் வாலை வேகமாக ஆட்டிக்கொண்டே ஒடிவரும்

எண்ண அலைகள் மனதில் மோதிக்கொண்டு இருந்தாலும் பேப்பரை ஒவ்வொரு வீடாகப் போட்டுக்கொண்டே சென்றான். கடைசியாகவுள்ள டாக்டர் வீட்டிற்கு வர இவனைப் பார்த்ததும் ‘ரோஜர்வேகமாக ஓடிவந்தது.  பேப்பரைப் போட்டுவிட்டு சட்டைப்பையில் வைத்திருந்த அந்தப் பிஸ்கட்டை எடுத்து நீட்டினான். அவன் கையிலிருந்து பிஸ்கட்டை வாயால் கவ்விக்கொண்டு வாலை வேகவேகமாக ஆட்டிக்கொண்டே தின்றது. “பேப்பரை வீசி எறியாதே... காத்துல பறந்து போகுது... எல்லாத்துக்கும் போட்ட பிறகு கடைசியா லேட்டாத்தான் போடுறாய்... எத்தன தடவ சொன்னாலும் ஒனக்கு புத்தியே வரமாட்டேங்கிது...என்றார் டாக்டர்.
     “சாரி...சார்! ஒங்க வீடு கடைசியாகத்தான் இருக்கு... ரயிலுக்கு நேரமாயிடுச்சு...கோவிச்சுக்காதிங்க...! மணி எத்தனைங்க?

     “ம்...ஏழத்தாண்டப் போவுது”  கேட்டவுடன் கதிரவன் வேகமாக மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு சென்றான். பேப்பரை எடுத்து வீட்டிற்குள் நுழைந்த பொழுது ‘ரோஜர்உள்ளே நுழைந்ததைப் பார்க்காமல் கதவை ஓங்கிச் சாத்த, வால் கதவில் சிக்கிக்கொள்ள ‘வீல்என்று கத்தியபடி டாக்டரைக்  கடித்துவிட்டது.  சுதாரித்துக்கொண்டு உடனேயே கதவைத் திறக்க, நாயின் வாலில் இருந்து இரத்தம் வடிந்தது.  டாக்டர் காலைப் பார்த்தார், நாயின் பல் பதிந்த இடத்தில் இரத்தம் கசிந்தது.  முறையாக நாய்க்கெல்லாம் ஊசி போட்டு இருந்ததால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லையென்றாலும்... தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு, நாயின் காயத்திற்கும் மருந்திட்டார்.  கண்களில் நீர் ஒழுக ‘ரோஜர்அவர் காலை நக்கிக்கொண்டிருந்த்து.  அதன் பிறகு அது எதையும் சாப்பிடவேயில்லை.

     திரவன் வேகமாகப் புகைவண்டியில் ஏறி அமர்ந்தான்.பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் படிப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடும்.  இருபது வயதுடைய  கருப்புத் தேக்குமரம் போன்ற வாட்டசாட்டமான உடல்வாகு. திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்த இலவச குளியலறையில் குளித்தான். கல்லூரிப் பேருந்தைப் பிடித்து கல்லூரிக்குச் சென்றான்.  கல்லூரியில் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது.  மாலை கல்லூரி முடிந்ததும் மலைக்கோட்டை வாசலுக்கருகில் வந்தான்.  அங்கு இருந்த முதலாளியிடம் வழக்கமாக விற்பனைக்காக வாங்கும் டி.வி.கவர், ரிமோட்கவர், கர்ச்சிப்களைப் பெற்றுக்கொண்டு கடைவீதியில் நின்றுகொண்டு கூவிக்கூவி விற்க முனைந்தான். 


அன்றைய தினம் விற்பனையைப் பொறுத்து அதிக பட்சமாக கமிஷன் நூறு ரூபாய் வரை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.  இரவு ஒன்பது மணிவரை விற்றுவிட்டு அன்றைக்கு கிடைத்த நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு அடுத்த அரைமணிநேரத்தில் இரயிலைப்பிடித்தான்; வண்டியில் உட்கார்ந்ததும் சிறிது நேரத்திலேயே தூங்கிப் போனான். மணப்பாறை வந்தவுடன் யாரோ எழுப்பிவிட எழுந்து சைக்கிளை எடுத்து ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். தனது தங்கை சாப்பாடு போடும் பொழுது இரவு மணி பதினொன்றை நெருங்குவது வழக்கமான ஒன்றுதான்.

     “ராசா!  படிக்கிற வயசில...ஒனக்குத்தான் எம்பூட்டு செரமம்!
அப்பா நெகிழ்ந்து கேட்டார்.

     “எங்களுக்காக நீ படாத செரமமா...? அதெல்லாம் ஒன்னுமில்லப்பா...அப்பாவிடம் எழுபது ரூபாயைக் கொடுத்தான். படுத்தவன் உடனே உறங்கிப்போனான்.

டுத்த நாளும் வழக்கம்போல்...எதை மறந்தாலும் பிஸ்கட்டை மட்டும் எடுத்துவைக்க மறக்கமாட்டான்.  கதிரவன் பேப்பர் போட்டுக்கொண்டு கடைசியாக டாக்டர் வீட்டிற்கு வந்த பொழுது...டாக்டர் காரில் பூங்காவிற்குச் சென்று வாக்கிங் போய்விட்டு காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.  எங்கிருந்துதான் வந்ததோ ‘ரோஜர்கார்முன் வேகமாகப் பாய்ந்தது.  டயரில் சிக்கி உடல் நசுங்கி அடுத்த நொடியில் துடிதுடித்து கதிரவன் கண்முன்னே இறந்தது.  காரில் இருந்து இறங்கிய டாக்டர்..., ‘ரோஜர்இறந்துவிட்டதைப் பார்த்தார்.
   
      “நேத்து என்னக் கடிச்சதில இருந்து எது கொடுத்தாலும்...எதுவுமே சாப்பிடல... தினந்தோறும் நீயும் பிஸ்கட்டெல்லாம் போடுவாய்...“

“ஆமாங்க டாக்டர் இதுமாதரி நாய இப்போதைக்கு வளர்க்க வசதியில்ல... என்னமோ தெரியல இந்த ‘ரோஜர்மேல அப்படி ஒரு பிரியம்”  இப்பொழுது கதிரவன் கண்கள் குளமாயின.

“இப்படி பண்ணிடுச்சே! தன்னந்தனியா இருந்த எனக்குத் துணையா பிள்ள மாதிரி இருந்திச்சு...”  டாக்டரும் கண்கலங்கி விம்மித் தேம்பினார்.

     “நாய் நன்றியுடையது... விசுவாசமா இருக்குமுன்னு கேள்விப்பட்டிருக்கேன்....!  ஆனா...இப்பத்தான் அத நேர்ல..”  கதிரவனால் அதற்குமேல் பேச முடியவில்லை.

     “முனிசிபாலிட்டிக்குப் போன் பண்ணி நாயைத் தூக்கிட்டு போய் ஆகவேண்டியத பார்க்கச் சொல்லவேண்டியதுதான்என்றார் டாக்டர்.

     “வேண்டாங்க டாக்டர்... என் சைக்கிள்ல வச்சு எடுத்திட்டு போயி நானே இதப் புதைச்சிடுறேன்...

     “சரிப்பா... இந்தா இந்த நூறு ரூபாய வச்சுக்கடாக்டர் மணிப்பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து நீட்டினார்.

     “வேண்டாம்....சார்...!“கதிரவன் பணத்தை வாங்க மறுத்து, நாயைத் தூக்கக் குனிந்தான், சட்டையிலிருந்த பிஸ்கட் கீழே விழுந்தது. 

                                      **********

12 comments:

 1. ஐந்தறிவு ஜீவனை ஏழாவது எட்டாவது அறிவு படைச்சு சிந்திக்கறதா காட்டிட்டாரோன்னு தோணுது படிச்சு முடிச்சதும். வுட்டா ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை’ன்னு லெட்டரே எழுத வெச்சுட்டு நாய் தற்கொலை பண்ணிக்கிச்சுன்னு சொல்வாரு போலயே ரைட்டரு...? ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. நடந்த நிகழ்வு அய்யா.

   நன்றி.

   Delete
 2. நன்றியை சாகடித்திருக்க வேண்டாம் என்றே தோன்றியது...

  ReplyDelete
  Replies
  1. நமக்கு(ம்) அப்படித் தோன்றுகிறது...!
   தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அய்யா.

   Delete
 3. கதைக்கரு முதலில் ஓகே! ஆனால்ம்ம்ம்ம்ம் முடிவு கொஞ்சம் யோசிக்க வைக்கின்றது....நாய்கள் பொதுவே அதுவும் பழகிய வண்டிகள் முன் பாயாது.....பயந்து ஒதுங்குமே அல்லாமல். பேஸ் அடிவாங்குகின்றது அங்கு. வேறு மாதிரி முடித்திருக்கலாம். கதையை இன்னும் மெருகேற்றியிருக்கலாமோ நண்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி அய்யா.

   Delete
 4. அன்புள்ள அய்யா,

  வணக்கம்.
  எனது ‘நேயம்’ சிறுகதை ஆறுதல் பரிசு வென்றிருக்கின்ற செய்தியை அறிந்து மகிழ்ச்சி!.

  “ஆவி டாக்ஸ்” வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை...! (குறும்பட - சிறுகதை போட்டியில் தேர்வுக்குழுவில் இடம்பெற்று... எனது கதையைத் தேர்வு செய்திட்ட திரு. ஸ்ரீராம் , திரு.சுரேஷ் குமார் , திரு. சிவகுமார் மற்றும் ‘கோவை ஆவி’ ஆகிய தங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  -நன்றி.

  ReplyDelete
 5. ஆம். நாய்கள் மனிதனை விட தன்னம்பிக்கையானவை. தற்கொலை அதற்குத் தெரியாது. துளசிஜி சொல்லியிருப்பது சரிதான். :))))

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. சமீபத்தில்கூட ஒரு I.A.S. ஒருவர் இறந்தபொழுது அவர் பிரியமுடன் வளர்ந்த நாய் அவரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடிப் பெட்டியில் தன்னுடைய இரண்டு கால்களை தூக்கி வைத்துக் கொண்டு எதையும் உண்ணாமல் அழுதுகொண்டே இருக்கின்றதை புகைப்படம் மூலம் போனவார ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் வந்தது தாங்கள் பார்த்திருப்பீர்கள்.

   நடந்த நிகழ்வைப் பின்னனியாகக் கொண்டு எழுதப்பட்டது.

   -மிக்க நன்றி.

   Delete
 6. ஜேம்ஸ் சார் கலக்குகிறீர்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி அய்யா.

   Delete
 7. அய்யா,

  ‘ஆவி டாக்கீஸ்’ -வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை குறும்பட சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வேண்டி தாங்கள் அனுப்பிய ஆறுதல் பரிசு கிடைக்கப் பெற்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பெருமுயற்சி எடுத்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் ‘ஆவி டாக்கீஸ்’ & தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete