Monday, April 6, 2015

கோவிந்தா - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 250 ஆறுதல் பரிசு பெறும் முதல் சிறுகதை..!


படைப்பாக்கம் :  மூன்றாம் சுழி அப்பாதுரை அவர்கள் 


கோவிந்தா
 ங்கராவின் முகம்.

சுவற்றில் பதிந்திருந்த சாயம் போன மார்பளவுக் கண்ணாடியில் தெரிந்த இன்னும் சாயம் போகாத நரைத்த முடி, மீசை, செய்த சவரம்.. எடுத்துக்காட்டிய முகம். முகத்தின் தளர்ச்சியிலும் கண்களின் தீவிரம்.மனதின் எண்ணங்கள்எல்லாமே முகத்தில் தெரிவதில்லை.

சமையலறையிலிருந்து கத்தினாள் புஷ்பா. "என்னாங்க.. குளிச்சு முடிச்சீங்களா? நாப்பது வருச நோவு இன்னியோட தீருதுனு தலை முழுவுனீங்களா?”

இடுப்பிலிருந்த துண்டை எறிந்து அலமாரியிலிருந்து அரைடிராயர் உள்ளாடையை எடுத்து அணிந்தார்.

"நாப்பது வருசமா புண்ணாக்கு வேலை.. பிசாத்து சம்பளம்.. மாடாட்டம் உழைச்சு பலனில்லே.."

..வெள்ளை பனியன்….

"உங்களுக்குப் பிறகு வந்தவங்கள்ளாம் வீடு நிலம் காரு நகைனு சேத்துட்டாங்கவீட்டுக்கடனை அடைக்காம நீங்க...."

..காக்கி காற்சட்டை...

"போவட்டும்.. வந்து இட்லி சாப்பிடுங்க.. நாளைக்கு இதும் கெடக்குதோ இல்லியோ.."

..காக்கி மேற்சட்டை.. பெல்ட்..

போதும் வாங்க.. டைம் ஆவுது

பழைய கண்ணாடியிலும் பளிச்சென்றிருந்தார் ரங்கராவ். அருகிலிருந்த சீப்பினால்முடி சீவிக்கொண்டார். கண்களில் அதே தீவிரம். முகத்தில் இறுக்கம். உதடுகளில் என்ன, புன்னகையா?

மேசையிலிருந்த பெட்டியைத் திறந்தார். உள்ளேயிருந்த சிறிய பதக்கத்தை எடுத்து இடப்புறப் பாக்கெட் மீது வைத்துக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். பிறகு வலப்புறம்... மாற்றிமாற்றிப்பார்த்துஇடப்புறத்தில் பொருத்திக்கொண்டார்.

"கத்திட்டிருக்கேன்.. அழகு பாத்துட்டிருக்கீங்களே.. பொண்ணு பாக்கவா கெளம்பிட்டிருக்கீங்க..?" புஷ்பா கோபமாகப் பார்ப்பது கண்ணாடியில் தெரிந்தது.

"சொல்லிட்டிருக்கேன்ல..? சாப்பிட்டு வேலைக்குப் போங்க.. கடைசி நாள் தானே? சீக்கிரம் வந்துருங்க.. அறுவது வயசாயிடுச்சு…. ஆமா..இன்னிக்கு ரிடையராவுற கான்ஸ்டபிள்என்னவோ திருடனைப் பிடிக்கிறாப்புல புது சொக்கா டிரவுசர் போட்டுகிட்டு.. ஹ்ம்ம். உங்களுக்கு மேலேயிருந்த இன்ஸ்பெக்டரு, திருடனோட சேர்ந்துபணம் அடிச்சு ஜெயிலுக்கும் போயாந்துட்டாரு. பெண்ணுக்கு கல்யாணம் கட்டி நல்லாத்தான் இருக்காரு. கூட இருந்த ஏட்டுங்க லஞ்சம் வாங்கினாங்களோ இல்லியோ ரிடையராகி கச்சேரி சினிமானு சுத்திட்டிருக்காங்க. ஏட்டு சுந்தரம் மந்திரியாகி சாவுற வரைக்கும் சம்பாரிச்சாரு. நீங்க என்னடானா நேர்மை நேந்திரங்காய்னுட்டு.. ஹ்ம்.. கிழடு தட்டினாலும் பவுசு குறையலே.." என்று நெருங்கி வந்து அவர் பதக்கத்தைச் சரிசெய்தாள். "சாப்பிடுங்க.. நான் ஸ்கூலுக்குப் போவணும்.."

"லீவு போடேன் புஷ்பா?" என்றார் ரங்கராவ் அமைதியாக.

"அய்யய்யோ.. டிஸ்ரிக் சூப்ரென்ட் வராரு.. ஹெட்மாஸ்டர் கண் ஆபரேசன்னு ஓடிட்டாரு. நான் அத்தினி பிள்ளைங்களையும் டீச்சருங்களையும் மேய்க்கணும். நாளைக்கு கவுன்சில் மீடிங் வேறே"

"நாளைக்கும் லீவு போடேன்?"

"உங்க சம்பளத்துக்கு நான் தினம் லீவு போட்டா அவ்ளோதான். அரசாங்க பள்ளிக்கூடம்ன்றதுனால ட்யூஷன் அப்படி இப்படினு பிழைப்பு ஓடுது."

"வேலையை விட்டுறேன்? எங்கனா போவலாம். கோவில் குளம் பாக்கலாம். திருப்பதி போவணும்னு வருசக்கணக்கா சொல்றியே?"

"யப்பாடியோவ்.. தண்ணி அடிச்சிருக்கீங்களா? பித்தாயிருச்சா? பேய் பிடிச்சுருச்சா? அய்யா.. இன்னியோட உங்க வேலை கோவிந்தா. சம்பளம் அரோகரா. பென்சன் மூவாயிரம்ன்றீங்க. இடுப்புத்துணி வாங்கவே பத்தாது மகாராஜா.."

"ஹ்ம்ம்.. இனி தினம் உன் குரலைக் கேக்கணுமா?" சிரித்தார்.

"நான் கத்துறது குறையா?"

"இல்லே கண்ணு.. அதான் நிறை. கத்தாம புலம்பாம கூவாம இருந்தா உன்னை விட்டு ஓடிருவேன்". செல்லமாக இடித்தார். தன்னைச் சுட்டி, "ஜோரா இருக்கேன்ல?" என்றார்.

"ஐயே.. சர்கில் இன்ஸ்பெக்டர் பாழாப்போவலே.. வெறும் கான்ஸ்டபிள் அதுக்கே இத்தினி பவுசு.. சாப்பிட்டுக் கெளம்புங்க".

                                   ******

காவல் நிலையம்.

பொன்னாடை போர்த்தி ரங்கராவின் கைகளைக் குலுக்கிய இன்ஸ்பெக்டர், பணியாட்கள் காவலர்களுடன் குழுப்படம் எடுத்தபின் பேசினார்.

"ரங்கராவ் சாருக்கு இன்னியோட ரிடையர்மென்டு. முந்தைய தலைமுறையின் கடைசி அடையாளம். நமக்கெல்லாம் பாடம். உங்கள்ல பலருக்குத் தெரிஞ்சிருக்கும். அகர்வால் நகைக்கடைல நம்ம ஆளுங்களே கூட்டா திருடுறதை நிறுத்துற முயற்சியில இறந்து போயிருக்கக்கூடிய அளவுக்கு அடிபட்டு நம்ம மானத்தை காப்பாத்தினவரு. அவரு நெனச்சிருந்தா ஊழல் பேர்வழிகள்ல ஒருத்தரா எத்தினியோ சம்பாரிச்சிருக்கலாம். அவ்வளவு ஏன்? நம்மளையே அப்பப்போ சந்தேகத்தோடு பாத்து நேர்வழில நடக்கச் சொல்லி கடுப்படிப்பாரு. எத்தனை நொந்திருப்பீங்கனு எனக்குத் தெரியும்". கூட்டத்தில் சிரிப்பு. "எனக்கும் தோணும். நேர்மையா இருந்து என்ன கண்டாருனு.. பாருங்க அகர்வால் வழக்குல இன்னும் விசாரணை கமிஷன் சிபிஐனு சாட்சி பேப்பர்னு அப்பப்போ ஓடுறாரு. இருவத்தஞ்சு வருசமாவது இருக்குமா?"

"முப்பத்தொண்ணு சார்" என்றார் ரங்கராவ். அவர் முகத்தில் சலனமேயில்லை.

"எனக்கே இருபத்தொம்பது வயசுதான். இத்தனை வருசமா கைக்காசு செலவழிச்சு உங்க நேர்மையை நிரூபிக்க அலையுறீங்க. பெருமைனாலும் வருத்தமா இருக்கு. தப்பா நினைக்காதீங்க சார்" என்று அவரிடம் ஒரு பணப்பையைக் கொடுத்தார் இன்ஸ்பெக்டர். "பத்தாயிரம் சார். உங்க உழைப்புக்கும் நட்புக்கும் எங்க அன்பான காணிக்கை. இந்தாங்க சார்.. எதுனா பேசுங்க".

ரங்கராவ் நன்றியுடன் தலையசைத்தார். பேச விருப்பமில்லாதது செய்கையில் தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் உள்பக்கமாகப் பார்த்தார். "சமோசா ஸ்வீட்டுங்கள்லாம் வந்துருச்சா?"


                                     *****

விளக்கொளியில் பளிச்சென்றிருந்தது அறை. நாற்காலிகளில் நாலைந்து பேர். நடுவேமேசையில் விஸ்கி புட்டிகள். மேசையின் விளிம்பில் இருந்தப் பெட்டியின் எதிரே உட்கார்ந்திருந்த ரங்கராவ், கையிலிருந்த கோப்பையை உயர்த்தி, "நன்றி" என்றார்.

"கூட்டணியில கடைசி ஆளும் ரிடையராயிட்டாரு" என்றார் ஒரு நாற்காலிக்காரர்.

"அட? நான் இன்ஸ்பெக்டராயிருந்தாலும்திட்டம்லாம் போட்டு சாட்சி தடயமெல்லாம் மாத்தி நம்மளை சுளுவா கழட்டிவிட்ட ராவ்தான் நம்ம எல்லாருக்கும் தலை.." என்று சிரித்தார் ஒருவர்.

"அப்படியில்லே" என்றார் ரங்கராவ். "நம்ம பிச்சைக்காரத் தொழில்ல அத்தனை ஊழல் பேர்வழிகளுக்கும் சலாம் போட்டுக் காலில் விழ வேண்டிருக்குது. படிக்காத நாம எப்படி ரிடையராவோம்ன்றகவலை.அப்ப சின்னதா இருந்த நம்ம ஸ்டேஷன்ல இருக்குறவங்களை வச்சு திட்டம் போட்டேன். இன்ஸ்பெக்டர்லந்து எல்லாரும் ஒத்துழைச்சது அதிர்ஷ்டம். எல்லாருமே தலைதான்"

"இந்தாய்யா உன் பங்கு பதினெட்டு லட்சம். இத்தனை வருஷ முதலீடு வட்டி லாபம்னு சேர்த்து எழுவது லட்சம் ரொக்கமா இருக்கு. கவனம்.புரியுதா?"

ரங்கராவ் மெதுவாகப் பெட்டியைத் திறந்தார். கற்றையாகப் பணம். சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தார், மூடினார். எழுந்தார்.

"எங்கேயா கெளம்பிட்டே?"

"கோவிந்தா போட" என்ற ரங்கராவ் தயங்கி, "ப்ளேன்ல" என்றார்.

பறக்கும் சைகை காட்டினார். பெட்டியுடன் வெளியேறினார்.

ரங்கராவின் முகம்.


இறுக்கத்தில் தீவிரத்துடன் இப்போது வேறேதோ தெரிந்தாற் போலிருந்தது.


                                      **********

8 comments:

  1. அசத்தல். அப்பா ஸார்னா அப்பா ஸார்தான். அருமையான எழுத்து நடை.

    ReplyDelete
    Replies
    1. பாலகணேஷ் சார், இந்தக் கதையை முதல் முறை வாசிக்கையிலேயே ரங்காராவ் கதாபாத்திரத்துக்கு உங்கள் முகம் தான் கண்முன் தோன்றியது.

      Delete
  2. அட! ஆவி! இங்கயும் அப்படித்தான்...வாசிக்கும் போது வாத்தியார் தான் நினைவுக்கு வந்தார். ரங்காராவ்!!! கூடவே சரிதாவும்!!!! புஷ்பா சரிதாவாக இருந்தால் ....அப்படினு ..

    கதை ஓகே! நல்லாருக்கு....ம்ம் ட்விஸ்ட் வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது. இப்படித்தான் போகும் என்று.....பட் நல்லாருக்கு ...

    ReplyDelete
  3. திரு. அப்பாதுரை ஐயாவுக்கு இதெல்லாம் லட்டு போல... அருமை...

    ReplyDelete
  4. மங்காத்தா ஆடும் ரங்காராவ் வில்ல(வ)னா நல்லவனா?

    ReplyDelete
  5. மிகவும் நன்றி. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. ஜி எம் பி அவர்களை மனதில் வைத்து அவசரமாக எழுதிய கதை.
    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete