Monday, April 13, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 2000 முதல் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  திருமதி. தமிழ் முகில் பிரகாசம்  அவர்கள் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 
              
           டிங் ! டிங் ! டிங் ! “  பள்ளிக்கூட மணி ஓசை கேட்டதும்,  அதுவரை பேச்சும் சிரிப்பும், கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டம், “கா ! கா ! “ என்ற குரல் கேட்டதும் தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள பறந்தோடி வரும் காக்கை இனத்தைப் போல, தம் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள தத்தம் வகுப்பறை நோக்கி ஓடினர்.

     அன்று முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. விடுமுறையில் சுற்றுலா சென்று வந்த இனிய நினைவுகள், அங்கு தாங்கள் கண்ட பல புதிய விஷயங்கள், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், சிறாருடன் கோலி, பம்பரம், பட்டம் என ஆசை தீர நாளெல்லாம் விளையாடிய நினைவுகள், கோயில் திருவிழா மகிழ்வலைகள் என்று தத்தமது இன்ப தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு சிறார் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

    முதல் இருக்கையில் கண்மணியும் வள்ளியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்மணியின் கையில் புதிதாய் ஒரு கடிகாரம். நடுவில் வாத்து பொம்மையின் முகம். அதைத் திறந்தால், உள்ளே அழகான கடிகாரம். அதைக் கண்டதும் வள்ளிக்கு மிகவும் பிடித்துப் போனது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வள்ளி அதை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் மெல்லியதாய் ஒரு புன்முறுவலுடன் வள்ளியை பார்ப்பாள் கண்மணி. சமயங்களில், ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வள்ளியின் கவனம் கடிகாரத்தின் மீதே சென்றது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

           உணவு இடைவேளையின் போது, கண்மணி வள்ளியிடம்,
“ வள்ளி ! இந்தா புள்ள, நீ இந்த கடிகாரத்தை கொஞ்ச நேரம் கட்டிக்கோ. உனக்கு இது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நான் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு போகையிலே வாங்கிக்கறேன் “ என்றாள். ஆனால் வள்ளியோ, அவசரமாக “ ஐயோ ! வேணாம் புள்ள ! அது விலை உசந்ததா இருக்கும் போல இருக்கு. நான் ஏதாச்சும் தெரியாம உடைச்சோ, பழுதாக்கியோ வெச்சுட்டேன்னா, நீ வீட்டுல திட்டு வாங்குவ. என்னால புதுசா வாங்கியும் தர முடியாது” என்று மறுத்தாள்.

        மாலையில் வீடு திரும்பியதும், அன்று பள்ளியில் நடந்தவை ஒன்று கூட விடாமல் தன் தாய் தகப்பனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“ ஐயா, இன்னைக்கு அந்த காரை வீட்டுப் பிள்ளை கண்மணி இல்ல, அது புதுசா ஒரு கடிகாரம் கட்டியிருந்தது. பாக்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. வாத்து பொம்மை போட்ட கடியாரம் அது. அந்த பொம்மை மொகம் மூடி மாதிரி இருந்துச்சு. அந்த மூடிய திறந்ததும் உள்ள அழகா கடிகாரம். நம்ம வீட்டுல இருக்குற கடியாரத்துல இருக்கற மாதிரி முள் எல்லாம் இல்ல. அதுல மணி அப்படியே வந்துச்சு. அதுல இருக்குற பட்டன அமுக்குனா கீ ! கீ !  சத்தம் கூட வந்துச்சு. அத அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அந்த பிள்ளை என்னைய  அந்த கடியாரத்தை கட்டிப் பாக்க சொன்னுச்சு. ஆனா, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் வள்ளி.

        கடிகார நினைவுகளோடே உறங்கியும் போனாள். கனவிலும் அதே கடிகாரம் வந்து மகிழ்வூட்டியது. “ அழகா இருக்கு புள்ள. விலை உசந்ததா இருக்கும் போல. பத்திரமா வெச்சுக்கோ “ என்று தூக்கத்தில் பேசிக் கொண்டாள். மகளின் பேச்சைக் கேட்டு பெற்றோரும் புன்முறுவல் பூத்தனர். அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டிற்கு வந்த வள்ளி, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீதியில் “ ஜிங் ! ஜிங் !” என்ற ஒலி. வாசலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் தந்தை,  “அம்மாடி வள்ளி ! இங்க வா தாயீ !  என்று அழைத்தார். “ அதோ ! அங்கன போற ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிடு ! “ என்றார். வாசலுக்கு ஓடி வந்த வள்ளி, ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிட, வள்ளியின் தந்தை “ அப்பா ! ஒரு கடியாரம் செஞ்சு குடுப்பா !” என்றார்.

        வள்ளிக்கு அவர் வைத்திருந்த பெரிய கழியின் உச்சியில் அழகாக சிங்காரம் செய்யப்பட்டு, காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல், கழுத்தில் சங்கிலி அணிந்து, இரண்டு கைகளையும் ஜால்ரா போல சேர்த்து “ஜிங் ! ஜிங் ! “ என்று தட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. பொம்மையின் அடியில், கழியில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறக் கலவையுடன் ஜவ்வு மிட்டாய். ஜரிகைக் காகிதம் சுற்றப் பட்டு இருந்த அந்த ஜவ்வு மிட்டாயிலிருந்து கொஞ்சம் எடுத்து அதை இழுத்து, வளைத்து, உருட்டி அழகான கைக்கடிகாரமாக மாற்றிக் கொடுத்தார் அந்த ஜவ்வு மிட்டய்க்காரர். சிறிது மிட்டாயை எடுத்து மோதிரமாக மாற்றி விரலில் அணிவித்து விட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து அவளது கன்னத்திலும் ஒட்டி விட்டார். வள்ளிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

“ ஐயா ! இன்னொரு மயில் மிட்டாய் செஞ்சு வாங்கிக்கவா ? “ என்று ஆசை ஆசையாய் கேட்டாள் வள்ளி.

“ யாருக்கு தாயீ ? “, 

“ என் கூட படிக்கிற கண்மணிக்கு !” , 

 “சரி , வாங்கிக்கோ ! “ என்றபடி

“இன்னொன்னு செஞ்சு குடுத்துருப்பா “ என்றார் வள்ளியின் தகப்பனார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் வள்ளி. “அம்மாடி! இப்போதைக்கு இந்த கடியார மிட்டாய வெச்சுக்கோ. இன்னும் செத்த நாள் பொறுத்து ஐயா உனக்கு நிஜ கடியாரமே வாங்கித் தாரேன் “ என்றார். மகிழ்ச்சியுடன் “ சரி ஐயா “ என்றவாறு குதித்தோடினாள் வள்ளி. அடுத்த நாள் பள்ளிக்கு செல்கையில், மறவாமல் ஜவ்வு மிட்டாய் வைத்திருந்த தூக்கினை எடுத்துக் கொண்டாள்.

        கண்மணியும் தன் தந்தை தனக்காக இருவேறு நிறங்களில் வாங்கிக் கொடுத்திருந்த கைகடிகாரங்களில், ஒன்றை தனக்கென வைத்துக் கொண்டு மற்றொன்றை ஆசைப்பட்டு கேட்ட தன் தோழிக்கு கொடுக்கப் போவதாய் சொல்லி தந்தையிடம் அனுமதி பெற்று வாங்கி வந்தாள். 

                                      **********

Sunday, April 12, 2015

வைரல் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 1000 இரண்டாம் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  திரு. பிரசன்னா கொத்து  அவர்கள் 


வைரல்  

              
       வினோத தொத்து வியாதி ஒன்று பரவியது. 'இந்த நோய் எனக்கு வந்துவிடுமோ' என்று ஒருவர் பயந்தால், அந்த நோய் உடனே அவருக்குத் தொத்திக்கொண்டு சரியாக ஒரு நிமிடத்தில் இறப்பு. அதற்கு வாலி என்று சம்பந்தமில்லாமல் பெயர் சூட்டுவதற்குள் அப்படி ஒரு பெயரை யோசித்தவரும் பயந்து பலியானார்.

      அந்த வைரஸ் பெரும் சக்தி பெற்றிருந்தது. அதற்குத் தேவையானது     எல்லாம் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மூளையில் அதைப்பற்றின பயம். உடனே பரவிவிடும். இப்படி ஒன்று பரவுகிறது என்று செய்தி வாசிப்பாளர் வாசித்ததுமே ஒரு நிமிடத்தில் இறந்தார். ஒரு சிலர் செய்தி வாசிக்கும்போது யோசிப்பதில்லை என்பதால் அவர்கள் மட்டும் அப்போதைக்குத் தப்பி பிறகு பொறுமையாக இறந்தனர். செய்தி எழுதுபவர்களுக்கும் அதே தான் நடந்தது.

       இந்த நோய் ஏற்கனவே கூட ஒருமுறை தோன்றியிருக்கிறது. ஆனால் அப்போது இது சிந்தனையினால் பரவும் என்று தெரியாததால் முதல் சில பேருடன் அமுங்கிவிட்டது. இந்த தடவை பேரழிவை ஏற்படுத்திவிட்டே மறையும் போல் தோன்றுகிறது. பேஸ்புக், ட்விட்டரிலும் அந்த நோயைப்பற்றி பகிர்ந்து பரப்பிக் கொத்துக் கொத்தாக இறந்தனர். பரப்பினால் பரவும் என்று தெரிந்தாலும் பரப்பினார்கள். இனி இந்த நோயைப்பற்றி யாரும் பேசக்கூடாது என அரசு தடை பிறப்பித்தது. ஆனால் தடையாணை வெளியிடுவதற்குள் அதிகாரிகள் அனைவரும் இறந்தனர். ஆனால் உப விளைவாக ஒரு நிமிட அன்பு எல்லா இடங்களிலும் ததும்பி ஓடியது. முந்தைய நிமிடம் வரை அடுத்தவரிடம் வெறுப்பை உமிழ்ந்தவர்கள் கூட பயந்ததும் கடைசி நிமிடத்தில் அனைவரிடமும் பரபரப்பான அன்போடு பழகினார்கள்.

       கடைசியாக எஞ்சியவர்கள் குழந்தைகள், சுயமாக யோசிக்க முடியாத மனநிலை சரியாக இருந்தவர்கள் (இறந்தவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று மாற்றி அழைக்கப்பட்டனர்), செய்தி பரவ முடியாத இடத்தில் இருந்த ஆதிவாசிகள் போன்றவர்கள்.
இவர்களுடன் அம்மாபாக்கம் ஏரியா பஞ்சாயத்து தலைவரும் பிழைத்தார். இப்படி ஒரு நோய் பரவுவதாகச் சொன்ன உதவியாளரிடம் அவர் கேட்டார், "இந்த பிரச்சினையில நமக்கு பணம் எதுவும் கிடைக்க வழியிருக்கா? எவ்வளவு தேறும்?உதவியாளர் பதிலேதும் சொல்வதற்குள் இறந்து விழுந்ததும் தலைவர் நோயைப்பற்றி அதற்குப் பிறகு சிந்திக்கவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம். இக்கதையின் கடைசி வரியை எழுதி முடித்ததும் கதாசிரியர் ஒரு நிமிடத்தில் மாண்டார். உங்களுக்கு இன்னும் அறுபது நொடிகள்அவகாசம்.

                                      **********

Thursday, April 9, 2015

தேள்கொடுக்கு - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 500 மூன்றாம் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  அரசன் அவர்கள் 

                                         தேள்கொடுக்கு

           வேப்பமரத்து நிழலில் வண்டியை நிறுத்திவிட்டுகோவில் டப்பைக் கதவில் கட்டியிருந்த தபால் பெட்டியில்கொண்டு வந்திருந்த கடிதத்தை போட்டுவிட்டு கிளம்பினாள் சுமதிவியர்வையில் நனைந்திருந்த  அவளின்   ஜாக்கெட்டை மேய்ந்தபிறகு தான் முகத்துக்கு தாவின கோவிலினுள்ளே ஊர்ஞாயம் பேசிக்கொண்டிருந்த கண்கள்முப்பது போல் தெரியாத உடல்வாகுமெலிந்ததேகம்சற்று பருத்த மார்புசிரிக்கையில் மட்டும் அடிக்கடி கண் சிமிட்டும் அவளைப் பார்த்தவுடன் எல்லோருக்கும் பிடித்துப் போகும்.

         வலதுபுற தாழ்வாரத்தில் வண்டியை நிறுத்திவிட்டுவாசலிலிருந்த மண்பானைத் தண்ணியை குடித்துவிட்டு உள்திண்ணையில் கிடந்த தளர்ந்து போன நார்க்கட்டிலில் தொப்பென விழுந்தாள்வெளியில் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்த கோழி பயந்து வேறுபக்கம் ஓடியது"ம்ம்மாவென வீறிட்டது பாலுக்கு ஏங்கிய இளங்கன்றோன்று

          "யோவ்ஐஸு நில்லுய்யா"என  ஐஸ்காரனை நிற்க சொல்லிவிட்டு   இடுப்பிலொன்றும்,  விரல் பிடித்தது ஒன்றுமாய் செல்லும் வசந்தியை எட்டி பார்த்ததும் சுமதிக்கு கண்ணில் நீர் கோர்த்துவிட்டதுயாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருந்தது சுமதிக்கு.யாருமற்ற அந்த வீட்டில் இவள் மட்டுமே இவளுக்கு ஆறுதல்.  மெல்ல கட்டிலிலிருந்து இறங்கி கூட்டாமல் கிடக்கும்வெறுந்தரையில் சுருண்டு படுத்தாள். வாசல் புழுதியை வாரி இறைத்து விட்டுப் போனது பெருங்காத்து ஒண்ணு

            இப்படித்தான் ஒருநாள் அவனும் வந்தான்மாவு அரைக்கப் போகையில்மெல்ல கையை சுரண்டியபடி மீசையை சொரிந்த சம்பத்திடம் செருப்பை காட்டி வந்தவஇவனிடம் எப்படி விழுந்தான்னு  இன்னும் ஆச்சர்யமா இருக்குதுவெடிச்ச வெள்ளரி மாதிரி அவன் சிரிச்ச சிரிப்புல சிக்குனவதான் இன்னும் தெளியல அந்த சீக்கு. எதையோ கேட்டு வந்தவனிடம் அவளையே கொடுக்குமளவிற்கு அடங்கிபோனாள்கொஞ்சநாள் ஆசையா பேசுனான்இவளுக்கும் அது பிடித்திருந்தது. எதிர்முனை பேச்சுக்கு எப்பவுமே மயக்கம் ஜாஸ்தி தானே!  பேச்சு கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்சலாய் மாறியது.

                          ஒருநாள் சுமதியோட ஆத்தாக்காரிசின்னு பக்கத்தூரு எழவுக்கு போயிருக்கும் நேரமா பார்த்து பின்வாசல் வழியாவந்துஇவளை நெருங்கவாரியணைத்துக் கொண்டாள். ருசி கண்ட நாக்கு சும்மா இருக்குமா முந்திரிமுட்டக்கருவதோப்பு இப்படின்னு அஞ்சாறு முறை தொடர்ந்ததுயாரும் வேண்டாம்அவன் மட்டும் போதுமென நினைக்குமளவிற்கு இழுத்துக் கொண்டு போனது அந்த கிறக்கம்சூடுபட்ட பூனையாட்டம் அடுப்பங்கரையில படுத்துக் கெடந்தவள பார்த்துட்டு"என்னடி இப்படி படுத்து கெடக்கேன்னுசின்னு கேட்க,  திக்கித் திணறி விசயத்தை சொன்னா சுமதி

                       "என் குடும்பத்துல இப்படி கொண்டாந்து இடிய  போட்டுட்டியேடின்னு கெடந்து கதறி கதறி என்னனென்னமோ சொல்லி திட்டிபுட்டுஆளு யாருன்னு கேட்டுட்டுகூட்டியாந்து நடுவூட்ல உக்கார வைச்சி அரவம் தெரியாம கேட்டா சின்னுஎதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டுஇன்னும் ரெண்டு வருஷம் போவட்டும் அத்தநான் கல்யாணம் பண்ணிக்கிறேன்அண்ணனை வைச்சிகிட்டு தம்பி கல்யாணம் பண்ணுனா ஊரு ஒலகம் ஒரு மாதிரியா பேசாதா?ன்னான்  மூணாவது தெரு பொம்மன் மகன் சங்கர்.

           ஊருஒலகம் ஒரு மாதிரி பேசறது இருக்கட்டும் மடிய நிரப்பி நிக்கும் எம் புள்ளைக்கு வழியென்ன? என்றாள்  சற்று ஆங்காரத்துடன்
 "அத்தஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டோம்நடந்தது நடந்து போச்சிஇப்ப தான் நெறைய வழியிருக்கே ஏதாவது ஒன்னை பண்ணிகலைங்கரெண்டு வருசத்துல சுமதி கழுத்துல தாலி கட்ட வேண்டியது எம் பொறுப்பு  மீறி வூட்டு பக்கம் வந்து சத்தம் போட்டு உங்க மானத்தை நீங்களே வாங்கிக்காதீங்கன்னு சொல்லிபுட்டு சுமதிய கூட ஏறெடுத்து பாக்காம விருட்டுன்னு கெளம்பினான் சங்கர்.

                     "கேட்டியாடி தேவிடியாஅவன் என்ன பேச்சு பேசிட்டு போறதஇவன நம்பி உன்னையே கொடுத்துருக்க. உன்னை வாழ வைக்கிறவன் மாதிரி தெரியலைடி.வாழ வைக்கணும்ன்னு நெனைக்கிறவன் எதுக்குடிவாய் கூசாமா கலைச்சிட்டுவான்னு சொல்ல போறான்ஆம்பளை இல்லாத வூடுங்கிற தைரியத்துல தான் நீயும் படிதாண்டி போன அவனும் அப்படி பேசிட்டு போறான்." ஆங்காரத்தில் கொஞ்ச நேரம் கத்திபுட்டு ,ராவெல்லாம் சுமதிக்கு மட்டும் கேட்கும்படி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள் சின்னு.

           அவன் போனதையும்முதன் முறையா ரெண்டு பேரும்  கட்டி உருண்ட எடத்தையும் மாறிமாறி பார்த்துகொண்டே கசிந்தாள் சுமதிபூனையொன்று சோற்றுப் பானையை உருட்டுவதைக் கூட கவனிக்காமல் மூலைக்கொரு ஆளாய் சுருண்டு கெடந்தனர்விடியுமுன்னேசுமதியை எழுப்பிவிட்டுகெளம்புடி திருவையாறு போவோம்ன்னு சொல்லி கெளப்புனா சின்னுரெண்டு நாள் ஹாஸ்பிட்டலில் தங்கும்படி ஆச்சிமூணாம் நாள் பொழுதோட வூடு வந்து சேர்ந்தார்கள் தாயும்புள்ளையும்.
வதங்கிய கீரைக் கொடி போலிருந்தா சுமதி.

          பத்து நாள் கழிச்சி ஒருநாள் வந்து வாசல்ல நின்னே பேசிட்டு போனான் சங்கர். தகவலறியத்தான் வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்  சுமதிதண்ணி புடிக்க அவன் வீட்டை கடக்கையில் முன்பெல்லாம் பட்டாம்பூச்சி கூட்டம் வட்டமடிக்கும்இப்போ கருவேல முள்ளாய் கிழித்துக் கொண்டிருக்கிறது அவன் நினைவுமூணு மாசத்துக்கு அப்புறம் ஒரு ராத்திரியில்இளம் போதையில் வந்து கதவை தட்டசுமதி திறந்தாள். சங்கர்  ஏதோ சொல்லஇவள் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தாள்.


         சுமதியை கன்னத்தில் வலுக்க அறைந்து உள்ள போடின்னு சொல்லிட்டு, "போடாஉன் அக்காதங்கச்சி அவளுக கூட படுத்து எழும்பு போ"வென கத்தினாள் சின்னுஎங்கேயிருந்து அந்த ஆவேசம் வந்தது என தெரியவில்லை சின்னுவுக்குசுமதி சற்று மிரண்டு தான் போனாள்அன்று போனவன் தான் அதன் பிறகு சுமதியை நாலைந்து முறை கோவிலில் பார்த்து விட்டு ஏளனமாய் கடந்து போனான். இவளும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. வலிகளை தாங்க பழகிக்கொண்டால்வலியின் சுவை சுகமாகத்தான் இருக்கும்போல

         ரெண்டு மாசம் படுக்கையில் கெடந்து , இவளை தனியா விட்டுட்டு ஒரு அமாவாசைக்கு முந்திய இரவில் போய் சேர்ந்தாள் சின்னுஒண்ணரை வருடத்திற்குள் வாழ்க்கையின் எல்லா கோரங்களையும் பார்த்து விட்டாள் சுமதிஉடலளவில் மட்டும் சோர்ந்து போயிருக்கிறாள் ஒழிய மனதளவில் தெம்பாகத்தான் இருக்கிறாள்பால் மாடொன்றை வைத்துக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கும் சுமதிக்குஇறக்கி வைக்க முடியாத அளவிற்கு சோகம் இருந்தாலும்இயல்பாய் இருப்பவளைமாசத்துக்கு ஒருமுறையேனும் சூறைக்காற்று போல வந்து சுழட்டியடித்துவிட்டு சென்று விடுறது அந்தக் கறுமை நினைவுகள். வேறு எவராக இருந்தாலும் இந்நேரம் தற்கொலை பண்ணிக்க கூடும்இவள் சற்று அழுத்தக்காரிதான்.  

          "நாப்பது பவுன் கேட்டுதெக்க உஞ்சினில இருந்து கட்டி வந்த பொண்டாட்டிக்கு குழந்தை வரமே இருக்காதுன்னு டாக்டர் சொன்னதிலிருந்து இந்த சங்கர் பய பித்து புடிச்சவன் மாதிரி ஆயிட்டான்னு அவன் ஆத்தாக்காரியே சொல்றான்னுபேசிக் கொண்டு போகும் ரெண்டு கெழவிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வாசலை பெருக்கிக் கொண்டிருந்தாள் சுமதி.



வெள்ளி சற்று பிரகாசமாக தெரிந்தது


                                      **********

Monday, April 6, 2015

கோவிந்தா - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 250 ஆறுதல் பரிசு பெறும் முதல் சிறுகதை..!


படைப்பாக்கம் :  மூன்றாம் சுழி அப்பாதுரை அவர்கள் 


கோவிந்தா
 ங்கராவின் முகம்.

சுவற்றில் பதிந்திருந்த சாயம் போன மார்பளவுக் கண்ணாடியில் தெரிந்த இன்னும் சாயம் போகாத நரைத்த முடி, மீசை, செய்த சவரம்.. எடுத்துக்காட்டிய முகம். முகத்தின் தளர்ச்சியிலும் கண்களின் தீவிரம்.மனதின் எண்ணங்கள்எல்லாமே முகத்தில் தெரிவதில்லை.

சமையலறையிலிருந்து கத்தினாள் புஷ்பா. "என்னாங்க.. குளிச்சு முடிச்சீங்களா? நாப்பது வருச நோவு இன்னியோட தீருதுனு தலை முழுவுனீங்களா?”

இடுப்பிலிருந்த துண்டை எறிந்து அலமாரியிலிருந்து அரைடிராயர் உள்ளாடையை எடுத்து அணிந்தார்.

"நாப்பது வருசமா புண்ணாக்கு வேலை.. பிசாத்து சம்பளம்.. மாடாட்டம் உழைச்சு பலனில்லே.."

..வெள்ளை பனியன்….

"உங்களுக்குப் பிறகு வந்தவங்கள்ளாம் வீடு நிலம் காரு நகைனு சேத்துட்டாங்கவீட்டுக்கடனை அடைக்காம நீங்க...."

..காக்கி காற்சட்டை...

"போவட்டும்.. வந்து இட்லி சாப்பிடுங்க.. நாளைக்கு இதும் கெடக்குதோ இல்லியோ.."

..காக்கி மேற்சட்டை.. பெல்ட்..

போதும் வாங்க.. டைம் ஆவுது

பழைய கண்ணாடியிலும் பளிச்சென்றிருந்தார் ரங்கராவ். அருகிலிருந்த சீப்பினால்முடி சீவிக்கொண்டார். கண்களில் அதே தீவிரம். முகத்தில் இறுக்கம். உதடுகளில் என்ன, புன்னகையா?

மேசையிலிருந்த பெட்டியைத் திறந்தார். உள்ளேயிருந்த சிறிய பதக்கத்தை எடுத்து இடப்புறப் பாக்கெட் மீது வைத்துக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். பிறகு வலப்புறம்... மாற்றிமாற்றிப்பார்த்துஇடப்புறத்தில் பொருத்திக்கொண்டார்.

"கத்திட்டிருக்கேன்.. அழகு பாத்துட்டிருக்கீங்களே.. பொண்ணு பாக்கவா கெளம்பிட்டிருக்கீங்க..?" புஷ்பா கோபமாகப் பார்ப்பது கண்ணாடியில் தெரிந்தது.

"சொல்லிட்டிருக்கேன்ல..? சாப்பிட்டு வேலைக்குப் போங்க.. கடைசி நாள் தானே? சீக்கிரம் வந்துருங்க.. அறுவது வயசாயிடுச்சு…. ஆமா..இன்னிக்கு ரிடையராவுற கான்ஸ்டபிள்என்னவோ திருடனைப் பிடிக்கிறாப்புல புது சொக்கா டிரவுசர் போட்டுகிட்டு.. ஹ்ம்ம். உங்களுக்கு மேலேயிருந்த இன்ஸ்பெக்டரு, திருடனோட சேர்ந்துபணம் அடிச்சு ஜெயிலுக்கும் போயாந்துட்டாரு. பெண்ணுக்கு கல்யாணம் கட்டி நல்லாத்தான் இருக்காரு. கூட இருந்த ஏட்டுங்க லஞ்சம் வாங்கினாங்களோ இல்லியோ ரிடையராகி கச்சேரி சினிமானு சுத்திட்டிருக்காங்க. ஏட்டு சுந்தரம் மந்திரியாகி சாவுற வரைக்கும் சம்பாரிச்சாரு. நீங்க என்னடானா நேர்மை நேந்திரங்காய்னுட்டு.. ஹ்ம்.. கிழடு தட்டினாலும் பவுசு குறையலே.." என்று நெருங்கி வந்து அவர் பதக்கத்தைச் சரிசெய்தாள். "சாப்பிடுங்க.. நான் ஸ்கூலுக்குப் போவணும்.."

"லீவு போடேன் புஷ்பா?" என்றார் ரங்கராவ் அமைதியாக.

"அய்யய்யோ.. டிஸ்ரிக் சூப்ரென்ட் வராரு.. ஹெட்மாஸ்டர் கண் ஆபரேசன்னு ஓடிட்டாரு. நான் அத்தினி பிள்ளைங்களையும் டீச்சருங்களையும் மேய்க்கணும். நாளைக்கு கவுன்சில் மீடிங் வேறே"

"நாளைக்கும் லீவு போடேன்?"

"உங்க சம்பளத்துக்கு நான் தினம் லீவு போட்டா அவ்ளோதான். அரசாங்க பள்ளிக்கூடம்ன்றதுனால ட்யூஷன் அப்படி இப்படினு பிழைப்பு ஓடுது."

"வேலையை விட்டுறேன்? எங்கனா போவலாம். கோவில் குளம் பாக்கலாம். திருப்பதி போவணும்னு வருசக்கணக்கா சொல்றியே?"

"யப்பாடியோவ்.. தண்ணி அடிச்சிருக்கீங்களா? பித்தாயிருச்சா? பேய் பிடிச்சுருச்சா? அய்யா.. இன்னியோட உங்க வேலை கோவிந்தா. சம்பளம் அரோகரா. பென்சன் மூவாயிரம்ன்றீங்க. இடுப்புத்துணி வாங்கவே பத்தாது மகாராஜா.."

"ஹ்ம்ம்.. இனி தினம் உன் குரலைக் கேக்கணுமா?" சிரித்தார்.

"நான் கத்துறது குறையா?"

"இல்லே கண்ணு.. அதான் நிறை. கத்தாம புலம்பாம கூவாம இருந்தா உன்னை விட்டு ஓடிருவேன்". செல்லமாக இடித்தார். தன்னைச் சுட்டி, "ஜோரா இருக்கேன்ல?" என்றார்.

"ஐயே.. சர்கில் இன்ஸ்பெக்டர் பாழாப்போவலே.. வெறும் கான்ஸ்டபிள் அதுக்கே இத்தினி பவுசு.. சாப்பிட்டுக் கெளம்புங்க".

                                   ******

காவல் நிலையம்.

பொன்னாடை போர்த்தி ரங்கராவின் கைகளைக் குலுக்கிய இன்ஸ்பெக்டர், பணியாட்கள் காவலர்களுடன் குழுப்படம் எடுத்தபின் பேசினார்.

"ரங்கராவ் சாருக்கு இன்னியோட ரிடையர்மென்டு. முந்தைய தலைமுறையின் கடைசி அடையாளம். நமக்கெல்லாம் பாடம். உங்கள்ல பலருக்குத் தெரிஞ்சிருக்கும். அகர்வால் நகைக்கடைல நம்ம ஆளுங்களே கூட்டா திருடுறதை நிறுத்துற முயற்சியில இறந்து போயிருக்கக்கூடிய அளவுக்கு அடிபட்டு நம்ம மானத்தை காப்பாத்தினவரு. அவரு நெனச்சிருந்தா ஊழல் பேர்வழிகள்ல ஒருத்தரா எத்தினியோ சம்பாரிச்சிருக்கலாம். அவ்வளவு ஏன்? நம்மளையே அப்பப்போ சந்தேகத்தோடு பாத்து நேர்வழில நடக்கச் சொல்லி கடுப்படிப்பாரு. எத்தனை நொந்திருப்பீங்கனு எனக்குத் தெரியும்". கூட்டத்தில் சிரிப்பு. "எனக்கும் தோணும். நேர்மையா இருந்து என்ன கண்டாருனு.. பாருங்க அகர்வால் வழக்குல இன்னும் விசாரணை கமிஷன் சிபிஐனு சாட்சி பேப்பர்னு அப்பப்போ ஓடுறாரு. இருவத்தஞ்சு வருசமாவது இருக்குமா?"

"முப்பத்தொண்ணு சார்" என்றார் ரங்கராவ். அவர் முகத்தில் சலனமேயில்லை.

"எனக்கே இருபத்தொம்பது வயசுதான். இத்தனை வருசமா கைக்காசு செலவழிச்சு உங்க நேர்மையை நிரூபிக்க அலையுறீங்க. பெருமைனாலும் வருத்தமா இருக்கு. தப்பா நினைக்காதீங்க சார்" என்று அவரிடம் ஒரு பணப்பையைக் கொடுத்தார் இன்ஸ்பெக்டர். "பத்தாயிரம் சார். உங்க உழைப்புக்கும் நட்புக்கும் எங்க அன்பான காணிக்கை. இந்தாங்க சார்.. எதுனா பேசுங்க".

ரங்கராவ் நன்றியுடன் தலையசைத்தார். பேச விருப்பமில்லாதது செய்கையில் தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் உள்பக்கமாகப் பார்த்தார். "சமோசா ஸ்வீட்டுங்கள்லாம் வந்துருச்சா?"


                                     *****

விளக்கொளியில் பளிச்சென்றிருந்தது அறை. நாற்காலிகளில் நாலைந்து பேர். நடுவேமேசையில் விஸ்கி புட்டிகள். மேசையின் விளிம்பில் இருந்தப் பெட்டியின் எதிரே உட்கார்ந்திருந்த ரங்கராவ், கையிலிருந்த கோப்பையை உயர்த்தி, "நன்றி" என்றார்.

"கூட்டணியில கடைசி ஆளும் ரிடையராயிட்டாரு" என்றார் ஒரு நாற்காலிக்காரர்.

"அட? நான் இன்ஸ்பெக்டராயிருந்தாலும்திட்டம்லாம் போட்டு சாட்சி தடயமெல்லாம் மாத்தி நம்மளை சுளுவா கழட்டிவிட்ட ராவ்தான் நம்ம எல்லாருக்கும் தலை.." என்று சிரித்தார் ஒருவர்.

"அப்படியில்லே" என்றார் ரங்கராவ். "நம்ம பிச்சைக்காரத் தொழில்ல அத்தனை ஊழல் பேர்வழிகளுக்கும் சலாம் போட்டுக் காலில் விழ வேண்டிருக்குது. படிக்காத நாம எப்படி ரிடையராவோம்ன்றகவலை.அப்ப சின்னதா இருந்த நம்ம ஸ்டேஷன்ல இருக்குறவங்களை வச்சு திட்டம் போட்டேன். இன்ஸ்பெக்டர்லந்து எல்லாரும் ஒத்துழைச்சது அதிர்ஷ்டம். எல்லாருமே தலைதான்"

"இந்தாய்யா உன் பங்கு பதினெட்டு லட்சம். இத்தனை வருஷ முதலீடு வட்டி லாபம்னு சேர்த்து எழுவது லட்சம் ரொக்கமா இருக்கு. கவனம்.புரியுதா?"

ரங்கராவ் மெதுவாகப் பெட்டியைத் திறந்தார். கற்றையாகப் பணம். சில நிமிடங்கள் பார்த்தபடி இருந்தார், மூடினார். எழுந்தார்.

"எங்கேயா கெளம்பிட்டே?"

"கோவிந்தா போட" என்ற ரங்கராவ் தயங்கி, "ப்ளேன்ல" என்றார்.

பறக்கும் சைகை காட்டினார். பெட்டியுடன் வெளியேறினார்.

ரங்கராவின் முகம்.


இறுக்கத்தில் தீவிரத்துடன் இப்போது வேறேதோ தெரிந்தாற் போலிருந்தது.


                                      **********