Wednesday, August 26, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன் - Classic Collections

                        அம்மா இன்றும் சொல்வார், நான் மூன்று மாத குழந்தையாக இருக்கையில் திரையரங்கம் சென்று அவர் பார்த்த படம் 'ஒரு தலை ராகம்'. அடம் பிடிக்காமல், கண்ணிமைக்காமல் முழுப் படத்தையும் பார்த்தேனாம். அதன் பின் நினைவு தெரிந்து பல முறை குடும்பத்தோடு திரையரங்கம் சென்று பார்த்தது என் நினைவில் உண்டு, படிப்பு முடிந்து வேலை என்றாகிவிட்ட பின்பு அம்மா அப்பாவோடு சேர்ந்து திரையரங்கில் படம்  பார்ப்பது அரிதாகிவிட்டது. தவிர அவர்களும் சின்னத்திரை ரசிகர்களாய் மாறிவிட்ட காரணத்தால் குடும்பத்தோடு ஒரு திரைப்படம் பார்க்கும் வழக்கம் கடிதம் எழுதுவதை போல் வழக்கொழிந்து போய்விட்டது. நேற்று திடீரென்று அம்மாவிடம் 'வீரபாண்டிய கட்டபொம்மன் போலாமா?' என்றதும் இருவரும் சரி என்றனர். அப்படியாக இந்த திருநெல்வேலி வீரனை தரிசிக்க புறப்பட்டோம்.டிஜிட்டல் மாயாஜாலம்:

                            பழைய படங்கள் பல தேடித்தேடி பார்ப்பவன் என்ற முறையில் எனக்கு குஷியே. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் தொழில்நுட்பம் வந்தபிறகு பழைய திரைப்படங்கள் புதுப் பொலிவுடன் வருவது சந்தோஷமே. இதற்கு முன் நினைத்தாலே இனிக்கும், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் பார்த்து உவகையடைந்திருக்கிறேன். என் தலைமுறையினர் இந்தப் படங்களை அரங்கில் பார்க்க இது ஓர் நல்ல வாய்ப்பாய் கருதினேன். கர்ணன் மிஸ் ஆகிவிட்டது. இந்தப் படத்தின் உள்ளே செல்லுமுன் இதன் தரம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒலி சிறப்பாய் கவனமெடுத்து தரம் கூட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒளியை பொறுத்தவரை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. (ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிறப்பாய் செய்திருந்தார்கள்). சில இடங்களில் Sepia என்று சொல்லப்படும் மங்கலான வண்ணத்திலேயே படம் தெரிகிறது. So Technically not satisfies a common audience who love to watch a quality film.

சிறப்பு: 
                         1957ல் பூஜை போடப்பட்டு பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரின் கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டது. 1958 ல் படப்பிடிப்பு முடிந்து 1959 மே மாதம் லண்டன் ப்ரீமியரில் வெளியிடப்பட்டது. தமிழில் Technicolor தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.  சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, OAK தேவர், VK இராமசாமி ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு இசை ஜி,இராமநாதன். சிவாஜி கணேசன் அவர்கள் மேடையில் அரங்கேற்றிய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு திரைவடிவம் கொடுத்து  பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருந்தார் BR பந்துலு. அந்த வருடத்திய சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், Afro-Asian திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை என மூன்று பிரிவுகளிலும் விருதுகளை வென்று குவித்தது.

கதை:

                       கட்டபொம்மன் வழிப்பறி திருடர்களை பிடிக்க மாறுவேடம் பூண்டு மாட்டுவண்டியில் வருவதில் ஆரம்பிக்கிறது படம். அவரிடம் சிக்கிக் கொள்ளும் வழிப்பறி கொள்ளையர் மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரத்தை உணர்கிறார் கட்டபொம்மன். தன் காளையை அடக்கும் வீரனை கைபிடிக்கத் துடிக்கும் வெள்ளையம்மாவையும் காளையை அடக்கி வீரத்தை நிரூபிக்கும்  வெள்ளையத்தேவனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் மன்னன். ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி அடிமையாய் வாழும் எட்டப்பன் என்பவனை உடன் சேர்த்துக் கொண்டு வரி கட்டாத கட்டபொம்மனை வளைத்துப் பிடிக்கிறது ஆங்கிலேயே படைகள். தப்பி ஓடி பின் அகப்பட்டு தூக்கிலடப் படுகிறார் அந்த மன்னர்மன்னர்.

 ஆவி Review:      
                       
                         நான் பார்த்த பெரும்பாலான படங்களில் சிவாஜி கணேசன் அவர்களின் மிகை ததும்பும் நடிப்பைக் கண்டிருக்கிறேன். (எ.கா : வியட்நாம் வீடு ) இந்தப் படத்தில் அந்த கம்பீரமும், உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பிலும் உலகின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் இவர் என்று சொல்லும் வார்த்தைக்கு உரித்தாகிறார். அளவான அந்த மீசை, அவர் மனைவியோடு இருக்கும்போது அழகையும், போருக்கு செல்லும்போது வீரத்தையும் வெளிப்படுத்துவது அம்சம். உடன் நடித்த ஜெமினி- பத்மினி லவ் டிராக் லவ்லி.மருத்துவர் வேடமிட்டு பத்மினி வரும்போது ரோமென்ஸ் பிளஸ் எமோஷன் கலக்கல்.

                          இவர்களுக்கு அடுத்து முக்கியமாய் சொல்ல வேண்டியது ஜி.இராமநாதனின் இசை. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஆபரா (Opera) இசையாகட்டும், தமிழ்நாட்டு ஒலிக்கருவிகளோ, மேலைநாட்டு ஒலிக்கருவிகளோ எதுவாயினும் அத்தனை எழிலுடன் ஒலிக்கிறது. அதிலும் பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசிலா குரலில் ஒலிக்கும் "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடல் அடடடா. காதலன்/காதலி இல்லாதவரையும் புதுக்காதல் தேடச் செய்யும். எஸ்.வரலட்சுமியின் குரலில்  சிங்காரக் கண்ணே பாடலும்     அம்சம். மற்ற பாடல்களும் ஒகே.

                            ஆங்கிலப் படங்களின் தரங்களுக்கு ஒப்பிடும் போது சண்டைக் காட்சிகள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம். சில பாடல்கள் படத்தின் நீளத்தை கூட்டுவதோடு சலிப்பையும் கொடுக்கிறது. மேலும் ஒரு முக்கியமான திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் பந்துலு. பத்மினியின் காரெக்டர், தைரியமான பெண்மணியாகவும், ஒரு வலிமையான ஆண்மகனை மணந்து கொள்பவராகவும் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் "போகாதே என் கணவா" என்று தன் கணவனை போருக்கு செல்ல விடாமல் தடுப்பதாய் வருகிறது. இது அந்த கதாப்பாத்திரத்தின் இயல்புக்கு புறம்பாய் அமைந்திருக்கிறது.


                             தவிர பாகுபலி போன்ற சண்டைக் காட்சிகளை பார்த்த ரசிகனுக்கு இதில் வரும் சண்டைகள் சிரிப்பையே உண்டாக்குகிறது. சண்டைக்கு நடுவில் சிவாஜி ஓடி வந்து தன் தம்பி மகளை பார்த்து பீலிங்ஸ் சிந்திவிட்டு செல்வது அபத்தம். காளையை அடக்கும் காட்சியில் ஜெமினி களத்தில் இறங்குகிறார். க்ளோசப் ஷாட் தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் ஒரு நோஞ்சான் ஸ்டண்ட் நடிகர் நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. அவர் உருவ ஒற்றுமையுடைய யாரையேனும் நடிக்க வைத்திருக்கலாம். வெடித்து சிரிக்க பெரிய நகைச்சுவைக் காட்சிகள் இல்லாதது மைனஸ். ஆடத்தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக ஆங்காங்கே பத்மினி அண்ட் சிஸ்டர்க்கு ஒரு பாட்டு போட்டிருப்பது பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் வியாபார தந்திரமோ? எது எப்படியோ மொத்தத்தில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது. டிஜிட்டல் ஏமாற்றத்தை தவிர..!          

5 comments:

 1. ••• தன் அமைச்சர் தப்பு செய்துவிட்டது தெரிந்து அவரை சீற்றத்தை அடக்கிக் கொண்டு நகைச்சுவை ததும்ப விசாரித்துவிட்டு, அவர் சரணடைந்ததும், ‘ஓலை தாங்கியே, என்ன இரும்பு இதயமடா உனக்கு, கட்டபொம்மன் அமைச்சரை அவன் எதிரிலேயே சிறை செய்ய’ என்று அடங்கிய குரலில் சீறுவாரே... ஒன்லி சிவாஜி.
  ••• ஜி.ராமநாதன் அந்நாட்களில் அசத்தல் இசை தந்தவர். ‘யாரடி நீ மோகினி‘ பாட்டு உத்தமபுத்திரனில் இப்ப கேட்டாலும் பிரமிப்பு. மெலோடி என்கிற மெல்லிசையில் கில்லாடி அவர்.
  ••• ‘சிவாஜிக்கு தெறமை பத்தாதுடே. இதே எங்க எம்ஜியாரா இருந்தா வெள்ளைக்காரனக் கொன்னு போட்டுட்டு போர்ல இறந்திருப்பார். இப்டி மாட்டிகிட்டு தூக்குலல்லாம் தொங்கிருக்க மாட்டாரு’ என்று அன்றைய ரசிகர்கள் ஸ்டேட்மெண்ட் நினைவில் வந்து புன்னகையை வரவழைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Hahaha Sir. From this movie I became fan of G.Ramanathan.

   Delete
  2. Hahaha Sir. From this movie I became fan of G.Ramanathan.

   Delete
 2. எப்போது இந்த படத்தைப் பார்த்தாலும் பிரமிப்பாகத்தான் பார்ப்பேன், ஆனால் என் அப்பா அம்மா சொன்ன கட்டப்பொம்மனுக்கும் சினிமா கட்டபொம்மன் கதைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு !

  சிவாஜி நடிப்பில் இந்தப்படமும் ஒரு மணி மகுடம்...!

  ReplyDelete