Saturday, November 21, 2015

உலக சினிமா திருவிழா - முன்னோட்டம்.


                   கோவாவில் நடைபெறும் உலக சினிமா திருவிழாவிற்கு வர எண்ணுபவர்களுக்கு கீழ்வரும் பதிவு பயன்படும் என நம்புகிறேன்.




கண்கவர் கோவாவும் உலக சினிமா திருவிழாவும் 

                 எப்போதுமே உலக மக்களால் விரும்பி வரக்கூடிய ஒரு இனிமையான சுற்றுலாத்தலம். அதில் உலக சினிமா திருவிழாவும் சேர்ந்து 
கொண்டால்.. கோலாகலம் தான். இங்கு நான் இரண்டாவது வருடமாக தொடர்ந்து வருவதை பெருமையாக நினைக்கிறேன். (இது என்ன சபரி மலையா? இங்கே வருதற்கு பெருமைப்பட? என்று பலர் நினைக்கக் கூடும்.)
என் போன்ற சினிமா வெறியர்கள் மட்டுமே இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளக் கூடும். மற்றவர்கள் நினைப்பதை நினைத்து விட்டுப் போகட்டும்.
சென்ற ஆண்டு ரூ.முன்னூறு மட்டும் நுழைவுக் கட்டணம் வைத்திருந்தார்கள். ஆனால் இம்முறை நுழைவுக் கட்டணமே ஆயிரம் ரூபாய். இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அளவுக்கு அதிகமான கூட்டத்தை 
கட்டுப்படுத்த என்று காரணம் கூறினாலும், சினிமா ஆர்வலர்கள் கடன் வாங்கியாவது இங்கே வந்துவிடுவார்கள் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.



தங்குமிடம்

                        மற்றொரு பிரதான பிரச்சனை -தங்குமிடம். சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் ஹோட்டல்கள் இந்த நவம்பர் முதல் ஏப்ரல் வரை மூவாயிரத்தில் தொடங்கி சாதாரண மக்கள் தங்க முடியாத அளவிற்கு வசூலிக்கவும் செய்கிறார்கள். இந்த திருவிழாவிற்கு நண்பர்களோடு வருபவர்கள் நான்கைந்து பேர்களாக சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பகிர்ந்து கொள்வார்கள். திருவிழா நடக்கும் இடத்திற்கு சற்றே தள்ளி அரை எடுத்தால் கொஞ்சம் வாடகை குறைய வாய்ப்பிருகிறது. ஆனால் வந்து போகும் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


போக்குவரத்து 

                       சென்னை, பெங்களூரு, மங்களூரு என எந்த இடத்திலிருந்து வந்தாலும் இரயிலில் வருபவர்கள் மடகாவ்(ன்) எனும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். பின்னர் இங்கிருந்து மினி பஸ்கள் கடம்பா பஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும். அதில் பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை பஸ்களை பொறுத்தும், கூட்டத்தை பொறுத்தும் வசூலிப்பார்கள். அங்கிருந்து 
ப்ரீபெய்ட் முறையில் பனாஜி (பஞ்சிம்) செல்லும் பஸ்சிற்கு நாற்பது ரூபாய் செலுத்தி ஷட்டில் ஒன்றில் பனாஜி வரை கொண்டு விடுவார்கள். (சுமார் பதினைந்து கிலோமீட்டர்கள்) அங்கிருந்து ஏற்கனவே புக் செய்த ஹோட்டலுக்கு செல்ல ப்ரீபெய்ட் டேக்ஸி, ஆட்டோ அல்லது பைக் டாக்ஸி போன்ற போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோக்கள் கிட்டத்தட்ட சென்னையைப் போல் தான் அவர்கள் வாய்க்கு வந்த ரேட்டைக் கூறுவார்கள். ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி பிழைத்துக் கொள்ளலாம். 

                          நீங்கள் தனியாளாக, அதிக சுமையில்லாமல் பயணிக்கிறீர்கள் என்றால் பைக் டேக்ஸி எடுத்துக் கொள்ளலாம். பைக் டேக்ஸி என்பது நாம் டூ-வீலருக்கு ஒரு டிரைவர் வைத்துக் கொள்வது போலத்தான். இரண்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு சுமார் முப்பதிலிருந்து நாற்பது வரை கேட்பார்கள். இவை அல்லாமல் பைக் அல்லது கார்களை நாம் வாடகைக்கு எடுத்தும் ஒட்டிக் கொள்ளலாம். நம் டிரைவர் லைசன்ஸ், பேன் (pan) கார்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொடுத்துவிட்டு (ஒரிஜினல்) முன்பணம் செலுத்தினால் தினவாடகை பைக்கிற்கு இருநூறும், காரிற்கு ஆயிரமும் வசூலிக்கிறார்கள். கோவாவை சுற்றிப் பார்க்க நினைப்பவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்வது பெட்டர்.
திருவிழாவிற்கு வருபவர்களுக்கு இது தேவைப்படாது. பெரும்பாலான நேரங்கள் திரைப்படம் பார்ப்பதிலேயே செலவாகும் என்பதால் இது வீணே.


திருவிழாவிற்கு பயன்படும்  வழிமுறைகள் 


                         திருவிழாவிற்கு வருபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பணம் செலுத்தி ஒரு டெலிகேட் ஐடி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். (டெய்லி பாஸ்களும் வழங்கப்படும்)  கோவா வந்ததும் பனாஜியிலிருந்து மிராமர் செல்லும் பேருந்தில் ஏறி நான்காவது ஸ்டாப்பில் (மார்க்கெட் அல்லது ஐநாக்ஸ் ஸ்டாப்) இறங்கி ஹெல்ப் டெஸ்க் சென்று நம் டெலிகேட் நம்பரைக் கூறினால் உடனடியாக ஒரு ஐடியும் ஒரு கிட்டும் (KIT - திருவிழாவில் கலந்து கொள்ளும் படங்களைப் பற்றிய ஒரு சிறுகுறிப்புடன் திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றிய புத்தகங்கள் இருக்கும்) கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு நேராக டிக்கட் கவுண்டர் சென்று நாம் அடுத்த நாள் பார்க்க வேண்டிய படங்கள் தேர்வு செய்து டிக்கட் பெற வேண்டும். ஒருவருக்கு மூன்று படங்களுக்கான டிக்கட் கொடுக்கப்படும். அதற்கு மேலும் பார்க்க விரும்பினால் டிக்கட் வாங்கியவர்கள் போக மீதம் இடமிருந்தால் டிக்கட் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிப்பார்கள். பெரும்பாலான நாட்களில் இதில் இடம் கிடைக்கும்.

                           பிறகென்ன, திரைப்பட விழாவில் வரிசையாக வெவ்வேறு நாட்டு கலாச்சாரங்கள், தொழில்நுட்பங்கள், மனிதர்களின் உணர்வுகள் என எல்லாவற்றையுமே அவர்கள் திரைப்படங்கள் வாயிலாக பார்த்து ரசிக்கலாம். 
உடன் கோவாவின் "எழில்"களையும் கண்டு ரசிக்கலாம். நாளையிலிருந்து தினமும் நான் பார்க்கும் படங்களைப் பற்றிய சிறு குறிப்பு தரலாம் என்றிருக்கிறேன். (நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில்) 


6 comments:

  1. பைக் டாக்ஸி புதுசா இருக்கே..
    என்ஜாய்..உங்க புண்ணியத்துல கொஞ்சம் படங்களை அறிந்துகொள்கிறேன்.. :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, ஆனால் நான் தினமும் இரண்டு ப்ளஸ் இரண்டு கிலோமீட்டர் நடந்து தான் போறேன்.. உடம்புக்கு நல்லது பாருங்க..! :)

      Delete
  2. நல்ல விவரங்கள். அங்கு என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள உதவியது. சினிமா பார்க்க டிக்கெட் வாங்குவது என்றால் காசு கொடுத்துதானே? அல்லது ஆயிரம் ரூபாய் நு.க என்பதால் freeயா?

    ReplyDelete
    Replies
    1. ஆயிரம் ரூபாய் அனுமதிச் சீட்டு வாங்கிவிட்டால் பத்து நாட்களும் தினமும் மூன்று திரைப்படங்கள் பார்க்கலாம் சார்.. அது இல்லாமல் நாம் rush லைன் க்யூவில் நின்று அரங்கம் நிறையாமல் இருந்தால் டிக்கட் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிப்பார்கள்.. இப்படி சரியாக திட்டமிட்டால் சுமார் ஏழு படங்களை ஒரே நாளில் பார்க்கலாம்.. நான் ஆறு பார்த்திருக்கிறேன்.. :)

      Delete