Tuesday, September 8, 2015

பாயும் புலி - திரை விமர்சனம்

"பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு" என்று வடிவேலு சொல்வாரே. அதுபோல வலுவற்ற கதையின் மேல் பின்னப்பட்ட திரைக்கதை என்பதால் பெரும்பாலான இடங்களில் ஆட்டம் காண்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள் பிரமாதம் என்ற போதும் காஜல் அறிமுகத்திற்கு பின் தொய்வடைந்து புலி பூனை வேகத்தில் நகர ஆரம்பிக்கிறது.




கதை:

                 'அண்டர் கவர்' போலிஸ் வீட்டிற்கு தெரியாமல் ஏரியா தாதாக்களை தயவுதாட்சண்யமின்றி சம்ஹாரம் செய்துவிட்டு தன் நிழலான உறவே முக்கிய குற்றவாளியென தெரிந்த பின் அவரிடம் 'மனசாட்சியே' இல்லாமல் பல பேரைக் கொன்றுவிட்டதாய் சொல்லி அவரையும் காலி செய்யும் ஒரு "நேர்மையான" போலிஸ் அதிகாரியின்  கதை.

 ஆவி Review:      
                   
                         சுசீந்திரன்- விஷால்- இமான் என பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம். கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரோமேன்ஸ், நிறைய ஆக்சன் என்ற அதே பார்ஃமுலாவை எடுத்துக் கொண்டது தவறில்லை. அதே போல அப்பா, அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு குழந்தை, வீட்டிற்கு தெரியாமல் பழிவாங்குதல் என பல 'அதே'க்கள் நம்மை சலிப்படைய வைக்கிறது.

                         விஷால் இதுபோன்ற டெம்ப்ளேட் படங்களில் நடிப்பதை தவிர்க்கலாம், நடிப்பில் குறை எதுவும் இல்லையென்றாலும் படத்தேர்வு மிக முக்கியம். காஜல் என்ற கதாநாயகிக்காக திரையரங்கம் வரும் ரசிகர்கள் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இத்தனை படங்களில் நடித்த பின்னும் அம்மணிக்கு "ஷ" னாவும் வரல. "ரா" னாவும் வரல. சூரி வழக்கம் போல் மொக்கை காமெடிகள். பள்ளிக்கூட சிறுவனுக்கு பயப்ப்படுமிடத்தில் கொஞ்சம் தேவலாம்.

                         சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம். கசங்காத கதர் சட்டையாய் வந்து போகிறார். ஏற்கனவே மாஸ் படத்தில் வில்லனாக பார்த்துவிட்டதால் இதில் வில்லன் என்ற ட்விஸ்ட் வீணாகிப் போகிறது. மேலும் ஆர்.கே எனும் நடிகனை வெறுமென உலவ விட்டிருப்பது கொடுமை. வேழ. ராமமூர்த்தி சுமாரான நடிப்பு. பாண்டியநாடு படத்தின் பலம் நிச்சயம் பாரதிராஜா. இதில் அதே போன்ற கதாப்பாத்திரம் என்றாலும் ஏனோ மனதில் தங்க மறுக்கிறார்.

                       
மைனஸ் :

                            கிளைமாக்ஸ் காட்சி இசை  மற்றும் பாடல்கள் சுமார். இமான் யுவனுடன் கூட்டணி சேருவார் போலத் தெரிகிறது. ஏகப்பட்ட திருப்பங்கள் இருந்தும் எதுவும் ரசிக்கும்படி அமையவில்லை. ஒளிப்பதிவு சுமார்.



                             மறைந்து தாக்கும் ஹீரோவுக்கும் பாயும்புலி டைட்டிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.  மொத்தத்தில் இது ரசிகர்களை நோக்கி பாயும் புலி.

Tuesday, September 1, 2015

தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி

                       

               மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமாகி இராஜநடை, துர்கா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த "பேபி ஷாமிலி" இப்போது தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதில் தனுஷுக்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரேமம் - 100வது நாள்..!

               பிரேமம்- மலையாளத் திரையுலகம் எப்போதும் கதை நிறைந்த திரைப்படங்களுக்காகவே பேசப்படும். இந்த பிரேமம் திரைப்படத்தில் திரைக்கதையே அதிகம் பேசப்பட்டது. பிரேமம் என்றால் காதல். காதல் கதையில் இனி புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. கதையின் நாயகன் தன் பள்ளி நாட்களில் ஆரம்பித்து, பின் கல்லூரி, வேலை பார்க்குமிடம் என மூன்று கதாநாயகிகளை காதலிக்கிறார். அதை சுவாரஸ்யமாய் சொன்ன விதத்தில் தான் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய நாட்களில் திரைப்படங்கள் இரண்டு வாரங்கள் ஓடுவதே அபூர்வமாகிவிட்டது. இந்தப்படம் நூறு நாட்களை கடந்து ஓடி நல்ல படங்களை நேசிக்கும் ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத்தான் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது.



               அல்போன்ஸ் புத்திரன்- நேரம் படத்தின் மூலம் இயக்குனராய் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நுழைந்தவர். நேரத்திலும் சரி, பிரேமத்திலும் சரி திரைக்கதையை மட்டும் முழுதாய் நம்பி ஜெயித்திருக்கிறார். இவருக்கு ஆவி டாக்கீஸ் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருக்கிறார். தனக்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கத்தை 'மலர்' என்ற தமிழ்ப் பெண் கதாப்பாத்திரத்தை வைத்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடித்துள்ளார்.

                  நிவின் பாலி - கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால் சகாப்தம் முடிந்து, பிரித்விராஜ் தலைமையில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வலம் வர ஆரம்பித்துள்ளனர். அதில் நிவின் பாலி தன் தேர்ந்த நடிப்பால் வருடத்தில் ஒன்றிரண்டு ஹிட் கொடுத்து, ப்ரித்விராஜ், பகத் பாசில் போன்றோரை பின்னுக்கு தள்ளி 'அடுத்த' சூப்பர் ஸ்டார் இடத்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். பிரேமத்தில் பள்ளியில் படிக்கும் போது மீசையில்லாமல் தான் காதலிக்கும் பெண்ணின் டாடியிடம் உதை வாங்கி ஒடுவதாகட்டும், கல்லூரியில் மீசை பிரித்து மாஸ் காட்டுவதாகட்டும், மலருக்கு உருகும் போதாகட்டும், பின்னாளில் முதிர்ந்த காதலனாய் தோன்றுவதாகட்டும் கெட்டப்பும் அசத்தல், உடல் மொழியிலும் பின்னியிருக்கிறார்.

                   கதாநாயகிகள்: இன்று கேரள உலகமே கொண்டாடும் கனவு நாயகியாய், மணம் வீசும் மலராய் திரையில் தோன்றிய சாய் பல்லவி, நம்ம கோயம்புத்தூர் பொண்ணு ங்கறது நாம எல்லாம் பெருமை பட்டுக்கலாம். அம்மணி ஒரு குத்து டான்ஸ் போடுறாங்க பாருங்க, அந்த ஒரு ஸ்டெப்புக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். மடோன்னா செபஸ்டியன் அந்தக் கால ராதிகாவையும், சந்தியாவையும் கலந்து செய்த முகம். இவருடைய கணீர் குரல் இவருக்கு ப்ளஸ். விஜய் சேதுபதியுடன் தமிழிலும் களமிறங்குகிறார் இந்த அழகு தேவதை. அனுபமா பரமேஸ்வரன், அந்த அடர்த்தியான கூந்தலுக்காகவே இளைஞர்களின் மனம் கொள்ளை கொள்ளுவார்.




                   நண்பர்கள்: நண்பர்களாய் சபரீஷ் வர்மா, கிருஷ்ண சங்கர் படம் நெடுக நாயகனுடன் வந்து காதலுக்கு மரியாதை செய்கின்றனர். கல்லூரி ஆசிரியராய் வரும் வினய், ஜோஜோவாய் வரும் சிஜு மற்றும் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் மனதில் ஆழமாய் பதியும் என்பதில் ஐயமில்லை.


                   கதை: காதல், காதல் தோல்வி, மீண்டும் காதல், மற்றுமொரு இழப்பு பின் காதல் போயின் காதல் என கடைசி வரை திகட்ட திகட்ட காதல் சொல்லும் படம். பல்வேறு பருவத்தில் ஜார்ஜ் என்ற கதையின் நாயகன் மனதில் பறக்கும் காதல் பட்டாம்பூச்சிகளே கதையின் கருவாய் அமைகிறது. காதலுக்கு குருவிக் கூடு போன்ற கூந்தல் கொண்ட தலையோ, பருக்கள் நிறைந்த முகமோ தடையாய் என்றுமே இருந்ததில்லை என்பதை சொல்லும் கவிதை.


                   மலையாள படமாச்சே புடிக்குமா, புரியுமான்னு யோசிக்காதீங்க. காதலுக்கு ஏதுங்க மொழி. தவிர படத்தில் பெரும்பாலும் தமிழ் டயலாக் தான். ரெண்டு தமிழ் பாட்டும் இருக்கு. ஒரு பாட்டை நம்ம அனிருத் பாடியிருக்கார். சபரீஷ் வர்மா எல்லா பாட்டும் எழுதி அசத்தியிருக்கிறார். அதிலும் "மலரே' பாடல் விஜய் யேசுதாசின் குரலில் தேன் போல் இனிக்கிறது. வினித் ஸ்ரீநிவாசன் குரலில் ஆலுவா புழ பாடலும் அருமை. ராஜேஷ் முருகேசனின் இசை நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது. மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்க வைக்கிறது. உங்களுக்கு காதல் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்குங்க..!