Tuesday, September 8, 2015

பாயும் புலி - திரை விமர்சனம்

"பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு" என்று வடிவேலு சொல்வாரே. அதுபோல வலுவற்ற கதையின் மேல் பின்னப்பட்ட திரைக்கதை என்பதால் பெரும்பாலான இடங்களில் ஆட்டம் காண்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள் பிரமாதம் என்ற போதும் காஜல் அறிமுகத்திற்கு பின் தொய்வடைந்து புலி பூனை வேகத்தில் நகர ஆரம்பிக்கிறது.




கதை:

                 'அண்டர் கவர்' போலிஸ் வீட்டிற்கு தெரியாமல் ஏரியா தாதாக்களை தயவுதாட்சண்யமின்றி சம்ஹாரம் செய்துவிட்டு தன் நிழலான உறவே முக்கிய குற்றவாளியென தெரிந்த பின் அவரிடம் 'மனசாட்சியே' இல்லாமல் பல பேரைக் கொன்றுவிட்டதாய் சொல்லி அவரையும் காலி செய்யும் ஒரு "நேர்மையான" போலிஸ் அதிகாரியின்  கதை.

 ஆவி Review:      
                   
                         சுசீந்திரன்- விஷால்- இமான் என பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம். கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரோமேன்ஸ், நிறைய ஆக்சன் என்ற அதே பார்ஃமுலாவை எடுத்துக் கொண்டது தவறில்லை. அதே போல அப்பா, அண்ணன் தம்பி, அண்ணனுக்கு ஒரு குழந்தை, வீட்டிற்கு தெரியாமல் பழிவாங்குதல் என பல 'அதே'க்கள் நம்மை சலிப்படைய வைக்கிறது.

                         விஷால் இதுபோன்ற டெம்ப்ளேட் படங்களில் நடிப்பதை தவிர்க்கலாம், நடிப்பில் குறை எதுவும் இல்லையென்றாலும் படத்தேர்வு மிக முக்கியம். காஜல் என்ற கதாநாயகிக்காக திரையரங்கம் வரும் ரசிகர்கள் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இத்தனை படங்களில் நடித்த பின்னும் அம்மணிக்கு "ஷ" னாவும் வரல. "ரா" னாவும் வரல. சூரி வழக்கம் போல் மொக்கை காமெடிகள். பள்ளிக்கூட சிறுவனுக்கு பயப்ப்படுமிடத்தில் கொஞ்சம் தேவலாம்.

                         சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம். கசங்காத கதர் சட்டையாய் வந்து போகிறார். ஏற்கனவே மாஸ் படத்தில் வில்லனாக பார்த்துவிட்டதால் இதில் வில்லன் என்ற ட்விஸ்ட் வீணாகிப் போகிறது. மேலும் ஆர்.கே எனும் நடிகனை வெறுமென உலவ விட்டிருப்பது கொடுமை. வேழ. ராமமூர்த்தி சுமாரான நடிப்பு. பாண்டியநாடு படத்தின் பலம் நிச்சயம் பாரதிராஜா. இதில் அதே போன்ற கதாப்பாத்திரம் என்றாலும் ஏனோ மனதில் தங்க மறுக்கிறார்.

                       
மைனஸ் :

                            கிளைமாக்ஸ் காட்சி இசை  மற்றும் பாடல்கள் சுமார். இமான் யுவனுடன் கூட்டணி சேருவார் போலத் தெரிகிறது. ஏகப்பட்ட திருப்பங்கள் இருந்தும் எதுவும் ரசிக்கும்படி அமையவில்லை. ஒளிப்பதிவு சுமார்.



                             மறைந்து தாக்கும் ஹீரோவுக்கும் பாயும்புலி டைட்டிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.  மொத்தத்தில் இது ரசிகர்களை நோக்கி பாயும் புலி.

Tuesday, September 1, 2015

தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி

                       

               மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தில் அறிமுகமாகி இராஜநடை, துர்கா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த "பேபி ஷாமிலி" இப்போது தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதில் தனுஷுக்கு இரட்டை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரேமம் - 100வது நாள்..!

               பிரேமம்- மலையாளத் திரையுலகம் எப்போதும் கதை நிறைந்த திரைப்படங்களுக்காகவே பேசப்படும். இந்த பிரேமம் திரைப்படத்தில் திரைக்கதையே அதிகம் பேசப்பட்டது. பிரேமம் என்றால் காதல். காதல் கதையில் இனி புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. கதையின் நாயகன் தன் பள்ளி நாட்களில் ஆரம்பித்து, பின் கல்லூரி, வேலை பார்க்குமிடம் என மூன்று கதாநாயகிகளை காதலிக்கிறார். அதை சுவாரஸ்யமாய் சொன்ன விதத்தில் தான் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய நாட்களில் திரைப்படங்கள் இரண்டு வாரங்கள் ஓடுவதே அபூர்வமாகிவிட்டது. இந்தப்படம் நூறு நாட்களை கடந்து ஓடி நல்ல படங்களை நேசிக்கும் ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத்தான் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது.



               அல்போன்ஸ் புத்திரன்- நேரம் படத்தின் மூலம் இயக்குனராய் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் நுழைந்தவர். நேரத்திலும் சரி, பிரேமத்திலும் சரி திரைக்கதையை மட்டும் முழுதாய் நம்பி ஜெயித்திருக்கிறார். இவருக்கு ஆவி டாக்கீஸ் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருக்கிறார். தனக்கும் தமிழுக்கும் உள்ள நெருக்கத்தை 'மலர்' என்ற தமிழ்ப் பெண் கதாப்பாத்திரத்தை வைத்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சிலும் இடம் பிடித்துள்ளார்.

                  நிவின் பாலி - கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால் சகாப்தம் முடிந்து, பிரித்விராஜ் தலைமையில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வலம் வர ஆரம்பித்துள்ளனர். அதில் நிவின் பாலி தன் தேர்ந்த நடிப்பால் வருடத்தில் ஒன்றிரண்டு ஹிட் கொடுத்து, ப்ரித்விராஜ், பகத் பாசில் போன்றோரை பின்னுக்கு தள்ளி 'அடுத்த' சூப்பர் ஸ்டார் இடத்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். பிரேமத்தில் பள்ளியில் படிக்கும் போது மீசையில்லாமல் தான் காதலிக்கும் பெண்ணின் டாடியிடம் உதை வாங்கி ஒடுவதாகட்டும், கல்லூரியில் மீசை பிரித்து மாஸ் காட்டுவதாகட்டும், மலருக்கு உருகும் போதாகட்டும், பின்னாளில் முதிர்ந்த காதலனாய் தோன்றுவதாகட்டும் கெட்டப்பும் அசத்தல், உடல் மொழியிலும் பின்னியிருக்கிறார்.

                   கதாநாயகிகள்: இன்று கேரள உலகமே கொண்டாடும் கனவு நாயகியாய், மணம் வீசும் மலராய் திரையில் தோன்றிய சாய் பல்லவி, நம்ம கோயம்புத்தூர் பொண்ணு ங்கறது நாம எல்லாம் பெருமை பட்டுக்கலாம். அம்மணி ஒரு குத்து டான்ஸ் போடுறாங்க பாருங்க, அந்த ஒரு ஸ்டெப்புக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். மடோன்னா செபஸ்டியன் அந்தக் கால ராதிகாவையும், சந்தியாவையும் கலந்து செய்த முகம். இவருடைய கணீர் குரல் இவருக்கு ப்ளஸ். விஜய் சேதுபதியுடன் தமிழிலும் களமிறங்குகிறார் இந்த அழகு தேவதை. அனுபமா பரமேஸ்வரன், அந்த அடர்த்தியான கூந்தலுக்காகவே இளைஞர்களின் மனம் கொள்ளை கொள்ளுவார்.




                   நண்பர்கள்: நண்பர்களாய் சபரீஷ் வர்மா, கிருஷ்ண சங்கர் படம் நெடுக நாயகனுடன் வந்து காதலுக்கு மரியாதை செய்கின்றனர். கல்லூரி ஆசிரியராய் வரும் வினய், ஜோஜோவாய் வரும் சிஜு மற்றும் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம் மனதில் ஆழமாய் பதியும் என்பதில் ஐயமில்லை.


                   கதை: காதல், காதல் தோல்வி, மீண்டும் காதல், மற்றுமொரு இழப்பு பின் காதல் போயின் காதல் என கடைசி வரை திகட்ட திகட்ட காதல் சொல்லும் படம். பல்வேறு பருவத்தில் ஜார்ஜ் என்ற கதையின் நாயகன் மனதில் பறக்கும் காதல் பட்டாம்பூச்சிகளே கதையின் கருவாய் அமைகிறது. காதலுக்கு குருவிக் கூடு போன்ற கூந்தல் கொண்ட தலையோ, பருக்கள் நிறைந்த முகமோ தடையாய் என்றுமே இருந்ததில்லை என்பதை சொல்லும் கவிதை.


                   மலையாள படமாச்சே புடிக்குமா, புரியுமான்னு யோசிக்காதீங்க. காதலுக்கு ஏதுங்க மொழி. தவிர படத்தில் பெரும்பாலும் தமிழ் டயலாக் தான். ரெண்டு தமிழ் பாட்டும் இருக்கு. ஒரு பாட்டை நம்ம அனிருத் பாடியிருக்கார். சபரீஷ் வர்மா எல்லா பாட்டும் எழுதி அசத்தியிருக்கிறார். அதிலும் "மலரே' பாடல் விஜய் யேசுதாசின் குரலில் தேன் போல் இனிக்கிறது. வினித் ஸ்ரீநிவாசன் குரலில் ஆலுவா புழ பாடலும் அருமை. ராஜேஷ் முருகேசனின் இசை நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறது. மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்க வைக்கிறது. உங்களுக்கு காதல் பிடிக்கும்னா இந்த படமும் பிடிக்குங்க..!

             

Monday, August 31, 2015

புதுமுகம் -அறிமுகம் (Singer Kharesma)

கரீஸ்மா ரவிச்சந்திரன் - தமிழ் திரையுலகில் பாடகியாய் அவதாரம் எடுத்திருக்கும் சின்னப் பெண். சில பாடல்கள் ஆடியோ ரிலீஸ் செய்கின்ற போதே பாடகர்களின் குரலுக்காக, இல்லை வரிகளுக்காக பிடித்து விடும். சில பாடல்கள் படம் பார்த்த பின் காட்சிகளுக்காக பிடித்துப் போகும்.தனி ஒருவன்‬ படத்தில்இவர் பாடியிருக்கும் இந்த பாடல் படம் பார்த்த போது பாடகரின் குரல் பிடித்துப் போய் நான் ரசித்த பாடல். இந்த சின்ன பெண்ணுக்குள் அம்புட்டு திறமை இருக்கு.. இன்னும் நிறைய பாடல்கள் தமிழில் பாட வாழ்த்துகள்!




                          இவர் இந்த பாடல் அல்லாது வேறு சில பாடல்களையும் ஒளிப்பதிவு செய்து இவரது யு-ட்யுப் சானலில் பதிவேற்றியுள்ளார். இவற்றை கண்டு ரசிக்க பின்வரும் சுட்டியை 'கிளிக்'கவும்.









இஞ்சி இடுப்பழகி - டிரெயிலர்

ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் டிரெயிலர் இதோ. செப்டம்பர் 6 ஆடியோ  வெளியிடப்படும். தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்ற பெயரில் வெளியாகிறது.


Friday, August 28, 2015

தனி ஒருவன் - Movie Review

                        பேட்மேன் படங்களை பார்த்ததுண்டா? கதாநாயகன் பேட்மேன் கடைசிவரை தன் எதிரி ஜோக்கரை கொல்ல மாட்டார். அதே போல ஜோக்கரும் பேட்மேனை தோற்கடிப்பாரே தவிர அவரைக் கொல்ல மாட்டார். ஒருவருக்கொருவர் தத்தமது  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி மற்றவரை வெல்ல நினைப்பர். கதாநாயகனும், வில்லனும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என நிரூபிப்பர்.  கிட்டத்தட்ட அதுபோன்றதொரு கதைக்களம் தான் இந்த தனி ஒருவன்.





சிறப்பு: 
                         அரவிந்த் சாமியின் நடிப்பை மணிரத்னம் படங்களில் பார்த்து ரசித்ததுண்டு. அதில் அவர் நடிப்பைத் தாண்டி மணிரத்னத்தின் இயக்கம் வெளிப்படுவதையும் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் இதில் மனிதர் சித்தார்த் அபிமன்யு என்ற கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இடைவேளைக்கு இருபது நிமிடங்கள் முன்னாடி தான் திரையில் தோன்றியபோதும் படம் முடிந்த பின்னும் நினைக்கும்படியான க்ளாஸ் ஆக்டிங். ஹேட்ஸ் ஆப் சார்!!

                            ஜெயம் ரவி தன் நடிப்புத் திறமையை அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார் என்றே சொல்லலாம். இதுபோன்ற கதை தேர்வுகள் நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.


கதை:
                 நேர்மையான போலிஸ், அதே நேரத்தில் தனக்கான எதிரியை தேர்வு செய்து கொண்டு அவரை சிறைப்பிடிக்க முயலும் ஒரு காவல் அதிகாரி ரவி,  அவருடைய சவாலுக்கு பதிலாய் ரவியை வைத்தே தன் காரியங்களை நகர்த்தும் புத்திசாலி வில்லன் அரவிந்த் சாமி, இவர்களுக்கிடையேயான ஆடு-புலி ஆட்டம் தான் தனி ஒருவன். இடையே கொஞ்சம் புல்லுக்கட்டாய் கதாநாயகி நயன்தாராவின் காதல் எபிசோட்.

 ஆவி Review:      
                     
                         முதலில் படத்தின் இயக்குனர் இராஜாவுக்கு பாராட்டுகள். விறுவிறுப்பான திரைக்கதையும் வலுவான கதையும், அத்தோடு  நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற சுபாவின் வசனங்களும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்தே பார்க்க வைக்கிறது. குறிப்பாய் "எல்லோருக்கும் நல்லது செய்ய இறைவனாலேயே முடியாது, அப்புறம் தானே நாமெல்லாம்" எனும் போது அரங்கில் க்ளாப்ஸ் பறக்கிறது.

                         தம்பி ராமையா "டம்மி" அப்பாவாக வலுவான  கதாபாத்திரத்தில் வந்து நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறார். அவரை தமிழ்நாட்டின் பிரம்மானந்தம் என்று சொன்னாலும் தகும். கணேஷ் வெங்கட்ராமன், ஹரிஷ் உத்தமன், ஸ்ரீசரண், அபிநயா, நாசர், முக்தா கோட்சே என அனைவரும் பலே பலே பலே. நயன்தாரா கொஞ்சம் முதிர்காதலியாய் தோன்றினாலும் அந்த தமிழ்நாட்டு உடையில் திரையில் தோன்றும் போது மனம் கொள்ளை கொள்கிறார்.

                          GPS கம் ரெக்கார்டர்  கருவியை வைத்தது தெரியாமல் தன் திட்டங்கள் வெளியே கசியும் போது ரவியின் நடிப்பு பிரமாதம் என்றால் தன் தந்தையிடம் பழத்தை உரித்துக் கொடுத்து குட்டிக் கதை சொல்லுமிடத்தில் அரவிந்த் சாமி சூப்பர் ஆக்டராய் ஜொலிக்கிறார். ஜெயம் ரவி அண்ட் டீம் செய்யும் முதல் பாதி ஆக்க்ஷன் காட்சிகள் அருமை.


செம்ம சீன்:

                           ஜெயம் ரவி சூழ்நிலையால் கட்டுண்டு நயன்தாராவிடம் கடிந்து கொள்வதும் பின் தன் காதலை உணர்த்துமிடமும், வாஆஆஆவ்!

மைனஸ் :

                             படத்தின் இறுதியில் வரும் "கண்ணால" பாடல் விறுவிறுவென போகும் படத்திற்கு ஸ்பீட் பிரேக்கர். தவிர இன்னும் சற்று அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளரால் படத்தை ஒருபடி உயர்த்தியிருக்க முடியும். "தனியொருவன் தீம் சாங்" தவிர இசை சுவையாய் இல்லை.



                                ஆங்காங்கே லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளால் மோகன் ராஜா எனும் தனியொருவன் சேர்த்த டீம் சிறப்பாய் வேலை செய்து ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறது.



     

Wednesday, August 26, 2015

வீரபாண்டிய கட்டபொம்மன் - Classic Collections

                        அம்மா இன்றும் சொல்வார், நான் மூன்று மாத குழந்தையாக இருக்கையில் திரையரங்கம் சென்று அவர் பார்த்த படம் 'ஒரு தலை ராகம்'. அடம் பிடிக்காமல், கண்ணிமைக்காமல் முழுப் படத்தையும் பார்த்தேனாம். அதன் பின் நினைவு தெரிந்து பல முறை குடும்பத்தோடு திரையரங்கம் சென்று பார்த்தது என் நினைவில் உண்டு, படிப்பு முடிந்து வேலை என்றாகிவிட்ட பின்பு அம்மா அப்பாவோடு சேர்ந்து திரையரங்கில் படம்  பார்ப்பது அரிதாகிவிட்டது. தவிர அவர்களும் சின்னத்திரை ரசிகர்களாய் மாறிவிட்ட காரணத்தால் குடும்பத்தோடு ஒரு திரைப்படம் பார்க்கும் வழக்கம் கடிதம் எழுதுவதை போல் வழக்கொழிந்து போய்விட்டது. நேற்று திடீரென்று அம்மாவிடம் 'வீரபாண்டிய கட்டபொம்மன் போலாமா?' என்றதும் இருவரும் சரி என்றனர். அப்படியாக இந்த திருநெல்வேலி வீரனை தரிசிக்க புறப்பட்டோம்.



டிஜிட்டல் மாயாஜாலம்:

                            பழைய படங்கள் பல தேடித்தேடி பார்ப்பவன் என்ற முறையில் எனக்கு குஷியே. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் தொழில்நுட்பம் வந்தபிறகு பழைய திரைப்படங்கள் புதுப் பொலிவுடன் வருவது சந்தோஷமே. இதற்கு முன் நினைத்தாலே இனிக்கும், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் பார்த்து உவகையடைந்திருக்கிறேன். என் தலைமுறையினர் இந்தப் படங்களை அரங்கில் பார்க்க இது ஓர் நல்ல வாய்ப்பாய் கருதினேன். கர்ணன் மிஸ் ஆகிவிட்டது. இந்தப் படத்தின் உள்ளே செல்லுமுன் இதன் தரம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒலி சிறப்பாய் கவனமெடுத்து தரம் கூட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒளியை பொறுத்தவரை பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. (ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சிறப்பாய் செய்திருந்தார்கள்). சில இடங்களில் Sepia என்று சொல்லப்படும் மங்கலான வண்ணத்திலேயே படம் தெரிகிறது. So Technically not satisfies a common audience who love to watch a quality film.

சிறப்பு: 
                         1957ல் பூஜை போடப்பட்டு பெரும்பாலான காட்சிகள் ஜெய்ப்பூரின் கொளுத்தும் வெயிலில் படமாக்கப்பட்டது. 1958 ல் படப்பிடிப்பு முடிந்து 1959 மே மாதம் லண்டன் ப்ரீமியரில் வெளியிடப்பட்டது. தமிழில் Technicolor தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல் வண்ணப்படம் இதுவாகும்.  சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, OAK தேவர், VK இராமசாமி ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு இசை ஜி,இராமநாதன். சிவாஜி கணேசன் அவர்கள் மேடையில் அரங்கேற்றிய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு திரைவடிவம் கொடுத்து  பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருந்தார் BR பந்துலு. அந்த வருடத்திய சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், Afro-Asian திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை என மூன்று பிரிவுகளிலும் விருதுகளை வென்று குவித்தது.

கதை:

                       கட்டபொம்மன் வழிப்பறி திருடர்களை பிடிக்க மாறுவேடம் பூண்டு மாட்டுவண்டியில் வருவதில் ஆரம்பிக்கிறது படம். அவரிடம் சிக்கிக் கொள்ளும் வழிப்பறி கொள்ளையர் மூலம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரத்தை உணர்கிறார் கட்டபொம்மன். தன் காளையை அடக்கும் வீரனை கைபிடிக்கத் துடிக்கும் வெள்ளையம்மாவையும் காளையை அடக்கி வீரத்தை நிரூபிக்கும்  வெள்ளையத்தேவனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார் மன்னன். ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி அடிமையாய் வாழும் எட்டப்பன் என்பவனை உடன் சேர்த்துக் கொண்டு வரி கட்டாத கட்டபொம்மனை வளைத்துப் பிடிக்கிறது ஆங்கிலேயே படைகள். தப்பி ஓடி பின் அகப்பட்டு தூக்கிலடப் படுகிறார் அந்த மன்னர்மன்னர்.

 ஆவி Review:      
                       
                         நான் பார்த்த பெரும்பாலான படங்களில் சிவாஜி கணேசன் அவர்களின் மிகை ததும்பும் நடிப்பைக் கண்டிருக்கிறேன். (எ.கா : வியட்நாம் வீடு ) இந்தப் படத்தில் அந்த கம்பீரமும், உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பிலும் உலகின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் இவர் என்று சொல்லும் வார்த்தைக்கு உரித்தாகிறார். அளவான அந்த மீசை, அவர் மனைவியோடு இருக்கும்போது அழகையும், போருக்கு செல்லும்போது வீரத்தையும் வெளிப்படுத்துவது அம்சம். உடன் நடித்த ஜெமினி- பத்மினி லவ் டிராக் லவ்லி.மருத்துவர் வேடமிட்டு பத்மினி வரும்போது ரோமென்ஸ் பிளஸ் எமோஷன் கலக்கல்.

                          இவர்களுக்கு அடுத்து முக்கியமாய் சொல்ல வேண்டியது ஜி.இராமநாதனின் இசை. மனிதர் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். ஆபரா (Opera) இசையாகட்டும், தமிழ்நாட்டு ஒலிக்கருவிகளோ, மேலைநாட்டு ஒலிக்கருவிகளோ எதுவாயினும் அத்தனை எழிலுடன் ஒலிக்கிறது. அதிலும் பி.பி.ஸ்ரீநிவாஸ், சுசிலா குரலில் ஒலிக்கும் "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடல் அடடடா. காதலன்/காதலி இல்லாதவரையும் புதுக்காதல் தேடச் செய்யும். எஸ்.வரலட்சுமியின் குரலில்  சிங்காரக் கண்ணே பாடலும்     அம்சம். மற்ற பாடல்களும் ஒகே.

                            ஆங்கிலப் படங்களின் தரங்களுக்கு ஒப்பிடும் போது சண்டைக் காட்சிகள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம். சில பாடல்கள் படத்தின் நீளத்தை கூட்டுவதோடு சலிப்பையும் கொடுக்கிறது. மேலும் ஒரு முக்கியமான திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார் பந்துலு. பத்மினியின் காரெக்டர், தைரியமான பெண்மணியாகவும், ஒரு வலிமையான ஆண்மகனை மணந்து கொள்பவராகவும் காட்டிவிட்டு இறுதிக் காட்சியில் "போகாதே என் கணவா" என்று தன் கணவனை போருக்கு செல்ல விடாமல் தடுப்பதாய் வருகிறது. இது அந்த கதாப்பாத்திரத்தின் இயல்புக்கு புறம்பாய் அமைந்திருக்கிறது.


                             தவிர பாகுபலி போன்ற சண்டைக் காட்சிகளை பார்த்த ரசிகனுக்கு இதில் வரும் சண்டைகள் சிரிப்பையே உண்டாக்குகிறது. சண்டைக்கு நடுவில் சிவாஜி ஓடி வந்து தன் தம்பி மகளை பார்த்து பீலிங்ஸ் சிந்திவிட்டு செல்வது அபத்தம். காளையை அடக்கும் காட்சியில் ஜெமினி களத்தில் இறங்குகிறார். க்ளோசப் ஷாட் தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் ஒரு நோஞ்சான் ஸ்டண்ட் நடிகர் நடிப்பது அப்பட்டமாக தெரிகிறது. அவர் உருவ ஒற்றுமையுடைய யாரையேனும் நடிக்க வைத்திருக்கலாம். வெடித்து சிரிக்க பெரிய நகைச்சுவைக் காட்சிகள் இல்லாதது மைனஸ். ஆடத்தெரியும் என்ற ஒரே காரணத்துக்காக ஆங்காங்கே பத்மினி அண்ட் சிஸ்டர்க்கு ஒரு பாட்டு போட்டிருப்பது பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் வியாபார தந்திரமோ? எது எப்படியோ மொத்தத்தில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இருந்தது. டிஜிட்டல் ஏமாற்றத்தை தவிர..!